சென்னையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகனும் எம்பியுமான கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டில் இன்று (ஜூலை 9) மீண்டும் சிபிஐ சோதனை நடத்திவருகிறது.
கார்த்திக் சிதம்பரம், சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்கிற அடிப்படையில் கடந்த மே மாதம் 17ம் தேதி அவருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 9)சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் 6 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த (மே 17) சோதனையின்போது அவரது வீட்டில் எல்லா இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது கார்த்தி சிதம்பரத்தின், அறையில் இருந்த பீரோ ஒன்று திறக்கப்படவில்லை. அதற்கான சாவி அந்தச் சமயத்தில் லண்டனில் இருந்த கார்த்தி சிதம்பரத்திடம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து அப்போது சோதனைக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், அந்த பீரோவுக்கு சீல் வைத்துவிட்டுச் சென்றனர். தற்போது அந்த பீரோவுக்கான சாவி கிடைக்கப் பெற்றதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் அந்த பீரோவைத் திறந்து சோதனை செய்து வருகின்றனர்.
அதில் என்ன ஆவணங்கள் உள்ளன, எவற்றைக் கைப்பற்றி உள்ளனர் என்பதுபற்றி இன்று மாலைதான் தெரியவரும் என்கின்றனர், சிபிஐ அதிகாரிகள். மதியம் 2.30 மணி முதல் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சிதான் இது என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். பீரோவில் இருக்கக்கூடிய ஆவணங்களின் அடிப்படையிலே, இந்த விசாரணை அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என அவர்கள் மேலும் தெரிவித்திருக்கிறார்கள்.
–ஜெ.பிரகாஷ்