மதுபான ஊழல் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 16) 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
டெல்லியில் 2021-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்!
இந்தநிலையில் மதுபான ஊழல் வழக்கில் ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதனை தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானதால் சிபிஐ அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து. டெல்லியின் பல இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு 8.30 மணியளவில் விசாரணைக்கு பிறகு சிபிஐ அலுவலகத்தில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியேறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “சிபிஐ அதிகாரிகள் என்னிடம் 56 கேள்விகள் கேட்டனர். அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். நான் முன்பே கூறியதை போல நாங்கள் எதையும் மறைக்கவில்லை. மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறும் குற்றச்சாட்டு என்பது தவறானது, புனையப்பட்டது, கீழ்த்தரமான அரசியல் ஆகும். நாங்கள் ஒருபோதும் எங்கள் நேர்மையை விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
சிபிஐ சொல்வது என்ன?
சிபிஐ தரப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானது குறித்து கூறும்போது, “மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சட்டப்பிரிவு 160-ன் கீழ் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். இந்த விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அவரிடம் நடத்திய விசாரணைகள் அனைத்தும் சட்டப்பிரிவு 161-ன் கீழ் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்களுடன் கெஜ்ரிவாலின் வாக்குமூலம் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அவர் இந்த வழக்கில் குற்றவாளியா அல்லது சாட்சியா என்பதை இந்த நேரத்தில் சொல்ல முடியாது. வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்துள்ளனர்.
கெஜ்ரிவாலிடம் ஏன் விசாரணை?
மதுபான ஊழல் வழக்கில் மணிஷ் சிசோடியாவின் உதவியாளர் அரவிந்திடம் நடத்திய விசாரணையில், “அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து மதுபான கொள்கை வரைவு அறிக்கையை என்னிடம் கொடுத்தார்கள். அந்த சந்திப்பின் போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் ஆகியோர் இருந்தார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிப்ஹாவ் குமாரிடம் நடத்திய விசாரணையில் 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மூன்று முறை தனது தொலைபேசி எண்ணை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
மதுபான ஊழல் கொள்கை வழக்கில் தொடர்புடைய சவுத் குரூப் நிறுவனர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
சென்னை-பெங்களூரு இன்று பலப்பரீட்சை: யாருக்கு வெற்றி?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!