அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சிபிஐ வழக்குப்பதிவு… எடப்பாடிக்கு அடுத்த நெருக்கடி!

Published On:

| By christopher

cbi fir against rajendra balaji

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. cbi fir against rajendra balaji

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தார். இவர் தனது பதவிக் காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி மூலம் 33 பேரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பண மோசடி வழக்கில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜி கடந்த 2022ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்தார்.

இதற்கிடையே, “முன்னாள் அமைச்சர் என்ற அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்துவதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்துகிறார்கள். எனவே ராஜேந்திர பாலாஜி வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை” எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் ரவீந்திரன் மேல்முறையீடு செய்தார்.

அதன்படி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்பின்னரும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனையடுத்து வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டதாக உத்தரவிட்டது.

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதாவது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவை தங்களது கூட்டணிக்குள் இழுக்க பாஜக பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று நமது மின்னம்பலம்.காம் தளத்தில் ’டிஜிட்டல்  திண்ணை: பத்து நாளில் இரட்டை இலை முடக்கம்? டெல்லி டெரர்… எடப்பாடி ஷாக்!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share