2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சரும், தற்போதைய நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஏழு ஆண்டுகள் பழமையான இந்த வழக்கின் விசாரணை முடிந்ததும், சமீபத்தில் சென்னையில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா மற்றும் அவருக்கு நெருக்கமான ஐந்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
இறுதி விசாரணை அறிக்கையில், வருமானத்திற்கு அதிகமாக ஆ.ராசா ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துக்களை குவித்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆ.ராசா அவரது குடும்ப உறுப்பினர்கள், அவருக்கு நெருங்கியவர்கள் உள்பட 16 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
அக்டோபர் 1999 – செப்டம்பர் 2010 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, ஆ.ராசாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள், நெருங்கியவர்கள் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதி நிலை அறிக்கைகள் மற்றும் நிலையான வைப்பு ரசீதுகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கை தொடங்குவதற்கு அடிப்படையாக அமைந்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆ.ராசா வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்து சேர்த்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது வருமானத்தை விட 579 சதவிகிதம் அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆ.ராசா மற்றும் அவருக்கு நெருக்கமான 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
2ஜி வழக்கில் 2017ல் ஆ.ராசாவை விடுதலை செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது,
செல்வம்
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி?
ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சி: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை