ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட இருவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலின் போது பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். அப்போது கடந்த 6-ந்தேதி அன்று சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் கொண்டு சென்ற பணம் நயினார் நாகேந்திரன் உடையது என்றும் மூவரும் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நயினார் நாகேந்திரனுக்கு இருமுறை சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து மே 2ஆம் தேதி ஆஜராக உள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே தாம்பரம் போலீசாரிடம் இருந்து வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் தற்போது சம்மன் அனுப்பியுள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா