அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஜூலை 7ஆம் தேதி ரெய்டு நடத்தியுள்ளனர். கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரித்தது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் இறங்கி தேடி வருகின்றனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் ரெய்டு தொடர்பான விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் முக்கியமானதாக அடிபடுகிறது. செந்தில் பாலாஜிதான் சிறையிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்று கரூர் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
திமுகவில் அமைச்சர் பொறுப்பிலிருந்த செந்தில் பாலாஜி தற்போது சிறையில் இருப்பதற்கு முக்கியமான காரணமே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான். இருவரும் கரூரைச் சேர்ந்தவர்கள். இருவரும் அதிமுகவில் இருந்த போதே இவர்களுக்கு இடையிலான மோதல் அனல் பறந்து கொண்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக இருந்து வந்துள்ளனர்.
கரூர் மாவட்ட அதிமுகவில் முக்கியத்துவம், மாவட்டத்துக்கான அமைச்சர் பதவியை யார் வாங்குவது என்பதில் ஆரம்பித்த போட்டி, தனிப்பட்ட பிரச்சினையாக மாறி தற்போது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான மோதலாகவும் வளர்ந்து அரசியலில் தீவிரமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி மீதான வழக்கு…எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேற்கொண்ட நகர்வு
ஜெயலலிதா ஆட்சியில் 2011 முதல் 2015 வரையில் செந்தில் பாலாஜி போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகங்களில் டிரைவர், கண்டக்டர், இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பதாரர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்தான் அமலாக்கத்துறையால் ஒரு வருடமாக சிறையில் இருக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் குழப்பங்கள் ஏற்பட்ட போது, டிடிவி தினகரன் ஆதரவாளராக செந்தில் பாலாஜி இருந்தார். பின்னர் 2018 இறுதியில் திமுகவில் இணைந்தார். அதன் பிறகே 2018 ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்துக் கழக ஊழியரான அருள்மணி என்பவர் இந்த விவகாரம் குறித்து செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் செந்தில் பாலாஜியை போக்குவரத்துக் கழக வேலைகளுக்கு பணம் பெற்ற வழக்கில் கட்டம் கட்டுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் அப்போது அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஈடுபட்டார். செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புக் காவல் துறையை வைத்து நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
இதனையடுத்து தொடர்புடைய துறை உயரதிகாரிகளிடம் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது உயரதிகாரிகள், ‘ இப்போதைய விவரங்களின்படி இந்த வழக்கு நிற்காது’ என்று அபிப்ராயம் தெரிவித்தார்கள். இதையடுத்து, ‘இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பாருங்க…’ என்று அப்போதைய முதல்வரான எடப்பாடியே அறிவுறுத்த, தலைமைச் செயலகத்திலேயே சில உயரதிகாரிகள் அப்போதைய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சந்தித்தனர். எம்.ஆர்.வி.யும் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதையடுத்து 2020 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி ஈஸ்வரமூர்த்தி முன்பாக விசாரணைக்கு ஆஜரானார் செந்தில் பாலாஜி.
இந்த எல்லா நடவடிக்கைகளுக்கும் பின்னால் இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் அளித்தவர்களின் பின்னணியிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தடங்களே இருந்தன. இதனையொட்டி செந்தில் பாலாஜி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கடுமையான கோபத்தில் இருந்து வந்தார்.
முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்…நடவடிக்கையில் விருப்பம் காட்டாத ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சரானார்.
ஜெயலலிதா மற்றும் கலைஞர் இருந்த காலங்களில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து நடந்து வந்தது. 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது கலைஞரை வீடு புகுந்து காவல்துறை கைது செய்தது பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், வேலுமணி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களைக் குறிவைத்து இவர்களெல்லாம் ஜெயிலுக்குப் போவார்கள் என்று பேசினார். ஆனால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு ஸ்டாலின் அதனை செய்யவில்லை. பழிக்குப் பழி என்ற போக்கு தொடர வேண்டாம் என்ற ரீதியில் ஸ்டாலின் தன்னுடைய அப்ரோச்சை மாற்றிக் கொண்டார். அதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் பெரிதாக நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
செந்தில் பாலாஜி கொடுத்த அழுத்தம்
செந்தில் பாலாஜி மட்டும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட முதல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, ”அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவருடைய சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதன் அடிப்படையில் தான் எடுக்கப்பட்டது” என்று கூறினார்.
உள்ளே வந்த அமலாக்கத்துறை
இந்த நடவடிக்கை நடந்த அடுத்த மாதமே செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையின் ஆபரேசன் தொடங்கியது. லஞ்ச ஒழிப்புத் துறையால் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வழக்கினை அமலாக்கத்துறை கையிலெடுத்தது. செந்தில் பாலாஜி மாநில அரசின் அதிகாரத்தை வைத்துக் கொண்டு விஜயபாஸ்கரை குறிவைத்த நிலையில், விஜயபாஸ்கர் மத்திய பாஜக அரசை வைத்து செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தார்.
2023 ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஒரு ஆண்டுக்கும் மேலாக தற்போது வரை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருகிறார். அவரது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டார். அதன்பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல அதிரடி மூவ்களை திமுகவிற்காக மேற்கொண்டார். கரூரில் ஜோதிமணியை வெற்றி பெற வைக்கவும், கோவையில் அண்ணாமலையை தோற்கடிக்கவும் செந்தில் பாலாஜி போட்டுக் கொடுத்த ஆக்சன் மூவ்கள் முக்கியக் காரணமாக இருந்திருக்கின்றன. தான் சிறையில் இருந்தாலும், கொங்கு மண்டலத்தின் அரசியலில் தன்னைத் தவிர்க்க முடியாது என்று செந்தில் பாலாஜி பல திட்டங்களை நடத்திக் காட்டினார்.
விடாத செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிக்கு இன்னும் பிணை கிடைக்காமல் தள்ளிக் கொண்டே போகும் சூழலில், தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நில அபகரிப்பு வழக்கில் சிபிசிஐடி போலீசார் சோதனையில் இறங்கியுள்ளனர். சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீடு, கரூர் என்.எஸ்.ஆர் நகரில் உள்ள வீடு உள்ளிட்ட 9 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தான் சிறையில் இருப்பதற்குக் காரணமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக திமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
“செந்தில் பாலாஜிக்கும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையிலான பிரச்சினை இப்போதைக்கு ஓயாது, ஒருவேளை செந்தில்பாலாஜி ஜாமீன் கிடைத்து வெளியே வந்துவிட்டால் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக அவரது பாய்ச்சல் இன்னும் வேகமாக இருக்கும்” என்கிறார்கள் கரூர் அரசியல் வட்டாரங்களில்.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஒரே டிக்கெட்டில் பஸ், மெட்ரோ, ரயிலில் பயணம் : பணி ஆணை வழங்கியது CUMTA!
புதிய சாதனை படைத்த விராட்கோலியின் இன்ஸ்டா பதிவு!
புதிய கிரிமினல் சட்டத்தில் திருத்தம்… ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு!
“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் ஆக்ஷன்”: கமிஷனர் அருண் பேட்டி!
ஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி!