நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு இன்று (ஜூலை 5) விசாரணைக்கு வரும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலமாக போலி ஆவணங்களை வைத்து மோசடியாக எழுதி பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 18ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த ஜூன் 25ஆம் தேதி விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை தனிப்படைகள் அமைத்து கடந்த 15 நாள்களாக தீவிரமாக தேடி வருகின்றது.
தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் அவர் கடந்த 1ஆம் தேதி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் இரண்டு ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
அதில் நேற்று தீர்ப்பு வழங்க இருந்த நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம், ’தந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளதால், நான்கு நாட்கள் மட்டும் முன்ஜாமீன் வழங்குமாறு கோரிய இடைக்கால ஜாமீன் மனுவை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சாதாராண முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்படும் என்று தெரிவித்து ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களின் வீடுகளில் இன்று காலை 8 மணி முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மணல்மேடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த யுவராஜ் என்பவரது வீட்டில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான 4 போலீசார் கரூர் மாவட்ட காவல்துறையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரகு மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிரிட்டன் பொதுத்தேர்தல் : ரிஷி சுனக் படுதோல்வி… ஆட்சி அமைக்கிறது தொழிலாளர் கட்சி!
பாரிஸ் ஒலிம்பிக்: இந்திய தடகள அணியில் இடம்பிடித்த 5 தமிழர்கள்!