பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகனிடம் சிபிசிஐடி இரண்டாவது முறையாக விசாரணை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் எடுத்துச் செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல்கள் வந்தது. இதனையடுத்து விரைந்து சென்று பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடியை பறிமுதல் செய்தனர்.
பணத்தை எடுத்துச் சென்ற நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்களான சதீஷ், நவீன், பெருமாள், முருகன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுகளுக்காக இந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது.
பிரச்சனை பெரிதானதால் 4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆர்.கே.சசிதர் டிஎஸ்பி நியமிக்கப்பட்டார். ஹோட்டல் ஊழியர்களான சதீஷ், நவீன், பெருமாள், முருகன் மற்றும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக நிர்வாகி கோவர்த்தன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களின் வாக்குமூலத்தை வைத்து பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகனிடம் கடந்த ஜூன் 5 ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து ஜூலை 16 ஆம் தேதி நயினார் நாகேந்திரனிடம் விசாரணை செய்தனர் சிபிசிஐடி போலீஸார்.
இதற்கிடையில், ஈரோட்டில் ரயில்வே கேண்டீன் நடத்தி வரும் முஸ்தபா என்பவர், தாம்பரத்தில் பிடித்த நான்கு கோடி பணம் தனக்கு சொந்தமானது என்று உரிமை கோரினார்.
விசாரணை அதிகாரி டிஎஸ்பி சசிதர், முஸ்தபாவின் வங்கி கணக்குகள் மற்றும் கேண்டீன் கணக்குகளை ஆய்வு செய்தார். விசாரணையின் போது ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்து தன்னுடைய பணம் இல்லை என்று முஸ்தபா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் இந்த வழக்கில் ஆஜராக இரண்டாவது முறையாக கேசவ விநாயகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். நீதிமன்றம் மூலம் இதற்கு தடை வாங்க முயற்சித்தார் கேசவ விநாயகன். ஆனாலும் நீதிமன்ற உத்தரவு அவருக்கு எதிராகவே வர, இதனை தொடர்ந்து காலை சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகன் ஆஜரானார். சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள விசாரணை அறையில் வைத்து அவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த விசாரணை தொடர்பாக சிபிசிஐடி வட்டாரத்தில் விசாரித்தோம்…
“காலை 10.30 மணிக்கு வழக்கறிஞர் பால்கனகராஜ் மற்றும் சில வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகளுடன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் கேசவவிநாயகன். அவரை மட்டும் உள்ளே அழைத்துக்கொண்டு மற்றவர்களை வெளியில் நிறுத்தினர் போலீஸார்.
கேசவவிநாயகனை சிபிசிஐடி அலுவலகத்தின் தரை தளத்தில் உள்ள விசாரணைக்கு அறைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணை அறைக்கு எதிரில் ஒரு அறை இருக்கும். உள்ளே நடப்பதை வெளியில் இருந்து பார்க்க முடியாத அந்த அறையில் தான் கேசவவிநாயகனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையை காலை 11.30 மணிக்கு ஆரம்பித்தார் டிஎஸ்பி சசிதர். உங்கள் பெயர்? இப்போது கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்? இந்த வழக்கு சம்பந்தமாக இதற்கு முன்பு விசாரணைக்கு வந்திருக்கிறீர்களா? என வழக்கமான கேள்விகளை கேட்டுவிட்டு, தாம்பரம் ரயிலில் நான்கு கோடி பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக கேள்விகளை கேட்டார். அனைத்து கேள்விகளுக்கும், தெரியாது, தெரியாது என்றே பதில் சொன்னார் கேசவவிநாயகன்.
பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட நபர்களில் சிலர் உங்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்களே? என்று கேட்டபோது, நான் தேசிய கட்சியில் மாநில பொறுப்பில் இருக்கிறேன். அதனால் பலர் போனில் பேசி இருக்கலாம், சந்தித்து இருக்கலாம் அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது என்று மழுப்பலாக பதில் சொன்னார்.
பின்னர் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். தண்ணீர் கொடுத்ததும் குடித்துவிட்டு மீண்டும் விசாரணைக்கு தயாரானார்.
தொடர்ந்து நயினார் நாகேந்திரன், கோவர்தன், எஸ்.ஆர்.சேகர், 4 கோடி பணம் அதைச் சார்ந்த கேள்விகளைக் கேட்டார் டிஎஸ்பி சசிதர். மாலை 4 மணி வரையில் விசாரணை நடந்தது. பின்னர் பார்மாலிட்டி கையெழுத்து வாங்கி மாலை 5.30 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்,
இந்த வழக்கில் இதுவரையில் சுமார் 25 நபர்களிடம் விசாரணை செய்ததில் ஒரு நபர்தான் (கோவர்தன்) நயினார் நாகேந்திரனின் பணம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். மற்றவர்கள் யாரும் நயினார் நாகேந்திரன் பணம் என்று சொல்லவே இல்லை” என்கின்றனர்.
“இந்த நான்கு கோடி பணம் என்பது நயினார் நாகேந்திரன் தேர்தலுக்காக எடுத்துச் சென்ற பணம் என்பதும், அவரைச் சார்ந்தவர்களால் 2024 மார்ச் 22 ஆம் தேதியிலிருந்து மூன்று இடங்களுக்கு மாறி மாறி கடைசியாக நெல்லை எக்ஸ்பிரஸ்க்கு வந்தது. இதில் ஈடுபட்டவர்களின் செல்போன் தொடர்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்கிறார்கள் வழக்கை கவனித்து வரும் வழக்கறிஞர்கள்.
கேசவ விநாயகனிடம் நடத்திய விசாரணைக்குப் பின் அடுத்த கட்ட நகர்வுகளை தொடங்கியிருக்கிறது சிபிசிஐடி.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…