அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2வது முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு கூட்டப்பட்டது. அதேவேளையில் அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றார்.
இதனால் அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இடையே மோதல் வெடித்து கலவரமானது.
இதுதொடர்பாக அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் 4 வழக்குகள் பதியப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் கடந்த 7ம் தேதி நேரில் ஆய்வு நடத்தினர்.
அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தபோது எம்பி சி.வி.சண்முகமும் நேரில் சென்றிருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று(செப்டம்பர் 14) அதிமுக தலைமை மேலாளர் மகாலிங்கம் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 15) சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லதா தலைமையில் 3 அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தலைமை அலுவலகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு அங்குள்ளவர்களிடம் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
கலை.ரா