அதிமுக பொதுக்குழு நடந்த போது, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் சூறையாடப்பட்ட அதிமுக அலுவலகத்திலிருந்து பணம் மற்றும் ஆவணங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜூலை 11ஆம் தேதி, வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் தலைமையில் அவர்களது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தை சூறையாடினார்கள். அப்போது ஒபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கலவரம் ஏற்பட்டது.
இரு தரப்பினர் மீதும் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து இபிஎஸ் ஆதரவாளர்கள் 35 பேர், ஒபிஎஸ் ஆதரவாளர்கள் 25 பேர் என மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர்.
செப்டம்பர் 22ஆம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்துப் போட வந்த இரு தரப்பினரையும், டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில், ரம்யா, ரேணுகா, லதா உட்பட நான்கு இன்ஸ்பெக்டர்கள் கொண்ட டீம் தீவிரமாக விசாரித்தனர்.
அதிமுக அலுவலகத்தில் என்ன நடந்தது, என்னவெல்லாம் காணாமல் போனது என்று சிபிசிஐடி போலீசார் மத்தியில் விசாரித்தோம்.
“அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் ஒரு சிசிடிவி கேமரா கூட பொருத்தப்படவில்லை. தலைமை அலுவலகத்தில் சிசிடிவி பொருத்த ஜெயலலிதா விரும்பவில்லை. அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை சாலையில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கொண்டே விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு, தமிழகத்தின் பிரபலமான முருகன் கோயில் ஐயர் ஒருவர் 7அடி உயரத்தில் வெள்ளி வேல் வழங்கினார், அந்த வேலை, அதிமுக தலைமை கழகத்தின் தனது அறையில் ஜெயலலிதா வைத்திருந்தார்.
அந்த வெள்ளி வேல் உதவியோடுதான், அத்தனை பீரோக்களையும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் உடைத்துள்ளனர். நெளிந்து வளைந்துபோன வெள்ளி வேலை, மூன்றாவது மாடியில் அக்கவுண்ட் பிரிவில் போட்டுவிட்டு, முக்கிய ஆவணங்களுடன், 35 ஆயிரம் பணத்தையும் எடுத்துப் போயுள்ளனர். மேலும், அங்கிருந்த மேசை மற்றும் ஜெயலலிதா படங்களையும் உடைத்து தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.
விசாரணை அதிகாரிகள் ஒபிஎஸ் ஆதரவாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, ஆவணங்கள், பொருட்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்திருக்கிறோம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலிடத்து உத்தரவுக்குக் காத்திருக்கும் டிஎஸ்பி, சிக்னல் கிடைத்ததும் ஒபிஎஸ்-க்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைப்பார்” என்றார்கள் சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள்.
வணங்காமுடி
ஸ்டாலின் குடும்பம்: அமித் ஷாவிடம் எடப்பாடி கொடுத்த ஃபைல்!
”காலேஜ்ல கிளாஸை கட் அடிச்சிருக்கேன், ஆனா…”- பிடிஆர் சுவாரஸ்யம்!