காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 25) உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி வரை காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 51 டி.எம்.சி நீரில் 15 டி.எம்.சி மட்டுமே கர்நாடக அரசு தந்துள்ளது. இதனால் எஞ்சியுள்ள 38 டி.எம்.சி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு மட்டுமே திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு தரப்பில், “தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடகா திறந்துவிடவில்லை என்றால் பயிர்கள் அனைத்தும் அழிந்துவிடும். காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்திருந்தது. கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளையும் உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் பின்பற்ற மறுக்கிறார்கள்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது
கர்நாடக அரசு தரப்பில், “கர்நாடகா திறந்து விட்ட நீரை தமிழகத்தில் வீணடித்துள்ளார்கள். மழை பொழிவில்லாமல் வறட்சியான சூழல் நிலவுவதால் நாங்கள் எப்படி தண்ணீர் திறந்து விட முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி கூடி இரு மாநில கோரிக்கை, மழைப்பொழிவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆலோசித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
காலை உணவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன? ஸ்டாலின் பேச்சு!
எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு: அதிமுகவினர் கொண்டாட்டம்!