காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு முறையாக செயல்பட்டு தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத்தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 9) சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழக சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்களும் திட்டமிடப்பட்டுத் தூர்வாரப்பட்டதனால் காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன.
இதன் பயனாக 2021-22-ஆம் ஆண்டில் 46.6 லட்சம் டன் அளவிலும் 2022-23-ஆம் ஆண்டில் 45.9 லட்சம் டன் அளவில் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தோம். இந்த சாதனையானது இந்த ஆண்டும் தொடர்ந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதம் நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்த 69.7 டிஎம்சி நீர் அளவையும் தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு 12.6.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்திற்காக திறந்து வைத்தோம். திறந்துவிடப்பட்ட நீர் கடைமடை வரை சென்று சேர்ந்தது. இத்தகைய நிலையில் செயற்கையான நெருக்கடியை கர்நாடகா மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகா அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய நீரை தரவில்லை. ஜூன் மாதத்தில் பிலிகுண்டுலுவில் நமக்கு கிடைக்க வேண்டிய 9.19 டிஎம்சிக்கு பதிலாக 2.2883 டிஎம்சி மட்டுமே வரப்பெற்றோம். இதனை தொடர்ந்து 3.7.2023 அன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை நேரில் சந்தித்து ஜுன் மற்றும் ஜூலை மாதத்தில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெற கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி வலியுறுத்தினார்.
இதன் பின்னரும் கர்நாடக மாநில அரசு உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. ஜூலை 27-ஆம் தேதி கர்நாடகாவின் 4 அணைகளின் மொத்த கொள்ளளவு 30 ஆண்டு சராசரியில் 84 விழுக்காடாகவும் அந்த அணைகளின் நீர்வரத்து 30 ஆண்டுகள் சராசரியில் 51 விழுக்காடாகவும் பிலிகுண்டுலுவில் 13 விழுக்காடு மட்டுமே நீர் வரப்பெற்றது.
இதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டிற்கு உடனடியாக நீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கோரப்பட்டது.
தமிழக அரசு தொடர்ந்த தொடர் முயற்சிகளின் விளைவாக ஜூலை 25-ஆம் தேதி கபினி அணையிலிருந்து விநாடிக்கு 11000 கன அடி அடுத்த ஆறு நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நடகா அரசு உத்தரவிட்டது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு 11.10.2023 அன்று அடுத்த கூட்டத்தை நடத்த உள்ளது. இக்கூட்டத்தில் பற்றாக்குறை ஆண்டான 2023-24-ல் ஏற்கனவே குழு மற்றும் ஆணையம் நிர்ணயித்துள்ள அளவில் அடுத்த 10 -15 நாட்களுக்கு அளிக்க வேண்டிய நீரையும் சேர்த்து வழங்க வலியுறுத்தியுள்ளோம்.
மேலும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டங்களில் தொடர்ந்து வலுவாக வாதிட்டு வந்துள்ளதால் 2023 -24 பற்றாக்குறை ஆண்டாக இருக்கும் போதிலும் மேட்டூர் அணையிலிருந்து 90.25 டிஎம்சி பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்மூலம் காவிரி டெல்டாவில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக நீர் பங்கீடு வழங்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் பொதுமக்களின் நலன் காக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டு மக்களின் உணவு தேவைக்காக மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர் தேவைக்கு அவசியமானது காவிரி நீர். மத்திய அரசு முறையாக செயல்பட்டு தமிழக அரசுக்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
சட்டப்பேரவையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற குழு!
பெண் பணியாளர்களின் பிரச்சினைகள்: பரிசீலிக்கும் ரயில்வே!