காவேரி டெல்டாவில் மத்திய அரசின் எண்ணெய் எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மேலும் எரிவாயுத் திட்டங்கள் செயல்படுத்தக் கூடாது என்று 2020 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போது, கடுமையான போராட்டத்துக்குப் பின் தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை இயற்றியது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பு உள்ளிட்ட சில திட்டங்களை நடைமுறைப்படுத்த தடைவிதித்தது. இச்சட்டம் அறிவித்தபடி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், கடலூர் மாவட்டத்தில் 5 பிளாக்குகள் (காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை), புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து பிளாக்குகள் (அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி) ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்டன.
அன்றைய நாகை மாவட்டம் என்பது மயிலாடுதுறை மாவட்டத்தையும் உள்ளடக்கியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது பிப்ரவரி 2020இல் அறிவிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை நாகை மாவட்டத்தின் பகுதி என்ற வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் பகுதியாக இருந்தது.
நிர்வாக வசதி கருதி, டிசம்பர் 2020இல் மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் உருவாக்கப்பட்ட போதும் அதன் பகுதியாக மயிலாடுதுறை இருந்தது. அதன் பிறகும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியாகவே அது தொடர்கிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தனி மாவட்டம் ஆனதால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியாக அதை குறிப்பதற்காக, 2020- ஆம் ஆண்டு சட்டத்தில் ஒரு திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்தது.
இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் காவிரிப் படுகை முழுவதையும் இணைத்து சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் த. ஜெயராமன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “வளமான வேளாண்பகுதிகள் முழுமையாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் இன்னமும் சேர்க்கப்பட்டு அறிவிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராணம் ஏரி பாசனப் பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள் கொண்டு வரப்படவில்லை. வட காவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றின் நீரை சேமிக்க வீராணம் ஏரி வெட்டப்பட்டது. அது கடலூர் மாவட்டத்தை வளப்படுத்துகிறது. ஆனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் முழு கடலூர் மாவட்டமும் சேர்க்கப்படவில்லை. (புவனகிரி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், விருத்தாச்சலம் ஆகியவை கடலூர் மாவட்டத்தின் பகுதிகள்.) கடலூர் மாவட்டத்தின் பெரும் பகுதி பெரிதும் காவிரி நீர்ப் பாசனத்தைப் பெறுகின்றன.
நீண்ட காலமாக காவிரி பாசனப்பகுதியாக இருக்கும் பகுதிகளிலும் கூட பல கிராமங்களை காவிரி படுகை பகுதியில் இருந்து விலக்கி அரசால் கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மும்முனை மின்சாரம், பயிர் காப்பீடு போன்ற வாய்ப்பு-வசதிகள் அக்கிராமங்களுக்கு மறுக்கப்பட்டன.
திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் சேர்க்கப்பட வேண்டும். காவிரி படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாட்டைப் பாதுகாக்க உதவும். இதை உடனடியாக தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்.
பழைய எண்ணெய் -எரிவாயுத் திட்டங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும். அதற்கு காவிரிப் படுகை முழுவதையும் இச்சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் பேராசிரியர் ஜெயராமன்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜி.வி.பிரகாஷுக்கு கதை எழுதும் யோகி பாபு
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
அமைச்சரும் ஸ்டார்… துறையும் ஸ்டார்… : முதல்வர் ஸ்டாலின்
கிச்சன் கீர்த்தனா: குதிரைவாலி பொங்கல்