cauvery issue Stalin vs Edappadi palaniswami

‘நான் நிரூபிக்கவா’ , “யாருக்கு துணிச்சல் இல்லை’ : ஸ்டாலின் -எடப்பாடி காரசார விவாதம்!

அரசியல் தமிழகம்

இன்று (அக்டோபர் 9) தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. இன்றைய கூட்டத் தொடரில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

காவிரி விவகாரத்தில் தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

“காவிரி நீர் தமிழக மக்களின் உயிர்நாடி. காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து பல முறை இந்த மாமன்றத்தில் விவாதித்திருக்கிறோம். இது 50 ஆண்டுகால பிரச்சினை.
1990ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற ஆணைப் படி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு நடுவர் மன்றத்தை அமைத்தது.

நடுவர் மன்றம் உத்தரவுபடி மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், அதனை வலியுறுத்தி 1993ஆம் ஆண்டு ஜூலை 18 முதல் 21ஆம் தேதி வரை 84 மணி நேரம் உடலை வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

பின்னர் மத்திய நீர்வளத் துறை அமைச்சரின் உத்தரவை ஏற்று ஜெயலலிதா உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்” என்று குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி,

முந்தைய காலங்களில் காவிரி நீரை பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உச்ச நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டியும் பேசினார்.

“நியாயமான நீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிடாதது சரியல்ல என்பதையும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும், அதை வலியுறுத்த வேண்டும் என்பதையும் இந்த தனி தீர்மானத்தில் இணைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு,  “தீர்மானமே அதுதானே” என்றார்.

அதற்கு, “நீங்கள் மத்திய அரசை வலியுறுத்த சொல்கிறீர்கள். ஆனால் தண்ணீர் கர்நாடக அரசிடம் இருக்கிறது” என்று  எடப்பாடி பழனிசாமி கூற,

மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் தெரிந்துகொள்வதற்காக சொல்கிறேன்… அவை முன்னவர் துரைமுருகன் எல்லா கட்சிக்காரர்களையும் அழைத்து சென்று மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து பேசினார். மாநில அரசு நடைமுறைப்படுத்தாததால் தான் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்” என்றார்.

உடனே எடப்பாடி பழனிசாமி,  “இது மத்திய அரசு அளித்த தீர்ப்பு அல்ல, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. அதை ஏன் கர்நாடக அரசு தடை செய்கிறார்கள். அதனால் தான் இதை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து சபாநாயகர் முதல்வரை பேச அழைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் – நான் தீர்மானத்தை படிக்கும்போது தெளிவாக படித்தேன். உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசை பேரவை கேட்கிறது. இதுதான் தீர்மானம்.

எடப்பாடி பழனிசாமி – கர்நாடகா திறக்க வேண்டும் என்று அதில் சொல்லவில்லை.. சரி ரைட்டு… நான் கடந்த மூன்று மாதங்களாக அரசின் கவனத்துக்கு பத்திரிகை வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும், இப்படியெல்லாம் பிரச்சினை வரும் என்று தெரிவித்து வருகிறேன். தண்ணீர் பிரச்சினை வரும். அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்துகளை தெரிவித்தேன். பயிர்கள் எல்லாம் கருகி போய்விட்டன. இதற்கெல்லாம் யார் பொறுப்பு?

சபாநாயகர் அப்பாவு – ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லை. எல்லோருடைய கருத்தும் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதுதான். யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. முயன்ற அளவுக்கு எல்லோரும் ஒருநிமிடம் கூட ஒய்வு இல்லாமல் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வார்த்தை மட்டும் நீங்கள் வாபஸ் பெற வேண்டும்…

எடப்பாடி பழனிசாமி – நாங்கள் அரசுடைய கவனத்துக்கு கொண்டு வந்தோம். நீங்களே எல்லாம் சொல்கிறீர்கள்… பிறகு நான் என்ன சொல்வது. தண்ணீர் திறக்க வேண்டும்… பயிர்கள் விளைச்சல் பெறும் வரை தண்ணீர் கிடைக்க வேண்டும். அதற்கு என்ன ஏற்பாடு?. இதைத்தான் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தேன். இதைத்தான் இப்போதும் சொல்கிறேன்.

சபாநாயகர் அப்பாவு – யாரும் மறுக்கவில்லை

எடப்பாடி பழனிசாமி – நீங்கள் பேசவே விடுவதில்லை. நடுவில் நடுவில் பிரேக் போடுகிறீர்களே…

சபாநாயகர் அப்பாவு – நீங்களும் பிரதமரை பார்த்தீர்கள்… அப்போது இதுபற்றி கேட்டீர்களா?

குறுக்கிட்ட நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் – எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருந்தவர். இந்த இலாகாவையும் பார்த்தவர். இப்போது பேசும்போது அவர் ஒரு  கருத்தை சொன்னார்.  ’முதல்வர் பெங்களூரு சென்றாரே அங்குள்ள முதல்வரிடமோ, மற்றவர்களிடமோ பேசக் கூடாதா’ என்று கேட்டார்.

இதுதான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பேசினால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியும். பல ஆண்டு காலம் பேசி பேசி பார்த்து முடியாத காரணத்தால் தான் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றோம். நீதிமன்றத்துக்கு போன பிறகு அப்போது கர்நாடகத்தில் என்ன சொன்னார்கள், பேசி தீர்த்துக்கொள்கிறோம் என்றனர். நீதிபதிகளும் பேசி தீர்வு காணுங்கள் என்று வழக்கை முடித்துவிடுவார்கள்.

ஆகவே தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் நீங்கள் பேசுவது. இன்னொன்று சொல்கிறேன். நம்முடைய உரிமையை அடகு வைப்பதற்கு சமம். நம்முடைய அறியாமையின் அடையாளம் அவர்களிடம் பேச வேண்டும் என்பது.

எடப்பாடி பழனிசாமி – தற்கொலைக்கு சமம் என்ற வார்த்தை சரியான வார்த்தை அல்ல. அப்படிப்பட்ட கட்சியோடு ஏன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

துரைமுருகன் – வயிறு வேறு வேறுதான். கொள்கையை விட்டுவிட்டு சேரவில்லை. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்குவதுதான் நோக்கம்.

சபாநாயகர் அப்பாவு – நிறைவுக்கு வாங்க…

எடப்பாடி பழனிசாமி – ஏங்க நிறைய பிரச்சினை இருக்கிறது. 22 நாட்கள் நமது உரிமையை பெறுவதற்காக நாடாளுமன்றமே ஒத்திவைக்கப்பட்டது. நாங்கள் போராடினோமா இல்லையா?. நீங்கள் ஒரு நாள் கூட நாடாளுமன்றத்தில் போராடவில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி – அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை காப்பாற்றுவதற்காக செய்யப்பட்ட நடவடிக்கையே தவிர தமிழகத்திற்காக இல்லை.

துரைமுருகன் – நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தீர்கள். நாங்கள் அதை மறுக்கவில்லையே. எதை மறுக்கணுமோ அதை மட்டும்தான் மறுத்தேன்.

எடப்பாடி பழனிசாமி – திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்கள் 38 பேர் உள்ளனர். ஏன் காவிரி பிரச்சினை பற்றி இவர்கள் குரல் எழுப்பவில்லை.

முதல்வர் ஸ்டாலின் – காவிரி பிரச்சினை பற்றி நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பேசவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார். நான் பேசியதை நிரூபிக்கவா? இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்லக் கூடாது. இதுதான் மரபா? எந்த ஆதாரத்தை வைத்து பேசவில்லை என்று சொல்கிறீர்கள்.

துரைமுருகன் – எதிர்க்கட்சி தலைவருக்கு எல்லாம் தெரியும். அந்த நேரத்தில் சில குழப்பம் இருந்ததல்லவா? அதனால் அவருக்கு மறந்து போய் இருக்கும்.

எடப்பாடி பழனிசாமி – நமது பிரச்சினையை பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன். திசை திருப்ப வேண்டாம். ஏன் நீங்கள் 38 பேர் இருக்கிறீர்கள்… அவையை ஒத்திவைக்கலாம் தானே. இப்படி அழுத்தம் கொடுத்ததால் தான் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த காலதாமதம் செய்த காரணத்தால் மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு துணிச்சலோடு தொடர்ந்தோம். தற்போதுள்ள அரசுக்கு அந்த துணிச்சல் இல்லை.

முதல்வர் ஸ்டாலின் – துணிச்சலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. உங்களுடைய துணிச்சல் என்னவென்று எங்களுக்குத் தெரியும். அதை சொல்லி மரபை மீற வேண்டிய அவசியமில்லை. பலமுறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறோம். அவையை முடக்குமளவுக்கு செய்திருக்கிறோம். நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். ஆதாரங்கள் இருக்கின்றன. தீர்மானம் நிறைவேற வேண்டும் என்பதற்காக நாங்கள் அமைதியாக இருக்கிறோம். அதனால் எதுவேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று கருதுகிறாரா.

எடப்பாடி பழனிசாமி – முதல்வர் எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்வதை நாங்கள் கேட்பதற்கு தயாராக இல்லை. நாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்.

முதல்வர் ஸ்டாலின் – இதுவரை நீங்கள் பேசியதற்கு குறுக்கிட்டு எதாவது கேட்டேனா. தவறான தகவலை சொல்வதுதான் தவறு என்று சொல்கிறேன். உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. இங்கிருக்கக் கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை நான் மறுக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி – அதிகமான அழுத்தத்தை கொடுத்தால் தான் இந்த பிரச்சினை தீரும். அதைதான் நான் வலியுறுத்துகிறேன். அதிமுக 22 நாள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது போல் நீங்களும் கொடுக்க வேண்டுதான் சொல்கிறேன் இதில் என்ன தவறு இருக்கிறது.

சட்டப்பேரவையில் இவ்வாறு காரசாரமான விவாதம் நடைபெற்றது. 

இதைதொடர்ந்து தனி தீர்மானத்தை அதிமுக ஆதரித்தது.  பின்னர் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

அன்புமணியை வாழ்த்திய விஜய்

இந்தியா கூட்டணிக்கு நம்பிக்கையை தந்த கார்கில் தேர்தல்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *