காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தை நாட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

Published On:

| By Kavi

காவிரி நீரை திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைப்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. இதற்குக் கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 16) அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற்றது.

அமைச்சர் துரைமுருகன் தலைமை ஏற்பார் என கூறப்பட்ட நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

காலை 11.50 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம்,

காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராமச்சந்திரன், மு.வீரபாண்டியன், விசிக சார்பில் தொல்.திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.எச்.ஜாவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், கொமதேக சார்பில் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் காவிரி நதிநீர் திறப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு எடுக்கப்பட்டது. சட்டப்போராட்டத்தை நடத்தி தமிழகத்துக்கான தண்ணீரை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “நீரியல் சட்டப்படி கடைமடைக்குதான் முன்னுரிமை இருக்கிறது. ஆனால் கடைமடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பாசன பரப்பு குறைந்திருக்கிறது. கர்நாடகாவின் பாசன பரப்பு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடகா பாசன பரப்பை அதிகரிக்கக் கூடாது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “கர்நாடக அரசின் போக்கிற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகுவது எனவும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கர்நாடக மாநிலம் அவர்களது வளங்களை வைத்து நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். கர்நாடக விவசாயிகள், மக்கள் அரசுக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்பதால் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம்.

ஆனால் தண்ணீரை பெற வேண்டிய சூழலில் தமிழ்நாடு இருக்கிறது. நாம் அனைவரும் ஒரே தேசத்தில் இருக்கிறோம். எனவே தமிழக மக்களின் உணர்வை மதிப்பதும் கர்நாடக அரசின் கடமை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான் உச்ச பட்சமானது. அந்த தீர்ப்பையே கர்நாடக அரசு மதிக்கவில்லை என்பது்தான் அதிர்ச்சியளிக்கிறது” என கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நிலமோசடி வழக்கு : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

மணல் குவாரி தொழிலதிபர்கள் மீதான ED வழக்கு ரத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share