காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் அதிமுக திட்டமல்ல: அமைச்சர் துரைமுருகன்

அரசியல்

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது அதிமுக அரசின் திட்டமல்ல. அது மத்திய அரசின் திட்டம்  என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

“முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே மூத்த பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளோம். வீணாகும் வெள்ள நீரை சேமிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளும்.

மேட்டூர்- சரபங்கா நதிகள் இணைப்புப் பணிகள் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை. காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகள் மற்ற மாநிலங்களிலும் தாமதமாக நடைபெற்று வருகிறது.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது அதிமுக அரசின் திட்டமல்ல. அது மத்திய அரசின் திட்டம். தமிழகத்தில் அனைத்து ஏரி, குளங்களும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை.

ஆனால், வரும் ஐந்தாண்டுகளில் அவர்களை படிப்படியாக நிரந்தர பணியாளர்களாக பணியில் அமர்த்த தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும்” என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

-ராஜ்

திமுக கையில் எடுக்கும் ஆயுதம் இந்தி: அண்ணாமலை

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – வயதாக ஆக உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.