–ரவிக்குமார்
பீகார் மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிட்டிருப்பது இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
மண்டல் குழு அறிக்கை வெளியிடப்பட்டதைப் போன்ற அரசியல் தாக்கத்தை பீகார் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிக்கை ஏற்படுத்தப்போகிறது. இதனால் இந்திய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு அளவு உயர்த்தப்படும். நாட்டின் அதிகார மையங்களை ஆக்கிரமித்துக்கொண்டு பெரும்பான்மை மக்களை வஞ்சித்தவர்களின் ஆதிக்கம் குறையும். அது தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் நன்மை பயக்கும். எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் பிற்படுத்தப்பட்டோருடன் இணைந்து நிற்பது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கடமையாகும்.
அவ்வாறு ஆதரவு தருவதோடு நின்றுவிடாமல் 1931 இல் நடத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது நேர்ந்த தவறை நேர்செய்து கொள்வதற்கு எதிர்வரும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதிதிராவிட சமூகத்தினர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதில்தான் அவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
ஆதிதிராவிடர் என்ற கோரிக்கை:
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகான 75 ஆண்டுகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட சிறு சிறு மக்கள்தொகை கொண்ட சாதிகளில் சில தம்மை ஒருங்கிணைத்துக்கொண்டு ஒரே பெயரில் அறிவித்துக்கொண்டதன் மூலம் தமது எண்ணிக்கை பலத்தை உயர்த்திக் கொண்டுள்ளன. எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற அரசியலில் இது அவர்களது பேர சக்தியை உயர்த்தியுள்ளது. இதற்கு மாறாக தனது எண்ணிக்கை பலத்தை இழந்த சாதி இந்தியாவில் பறையர் சாதி மட்டும்தான். 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களான எம்.சி.ராஜா, மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்டோர் சென்னை மாகாணத்தில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களை ‘பறையர், பஞ்சமர் என அழைப்பதைத் தடை செய்யவேண்டும், அவர்களை ஆதி திராவிடர்கள் என அழைக்க வேண்டும்’ என சென்னை மாகாண அரசாங்கத்தை வலியுறுத்தினர். 1921 ஆம் ஆண்டு சென்சஸின் போது அதற்கான பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். அதன் தாக்கத்தின் காரணமாக 50 ஆயிரம் பேர் தம்மை ஆதி திராவிடர் என 1921 சென்சஸில் பதிவு செய்துகொண்டனர்.
அரசாணையும் சென்சஸ் கணக்கெடுப்பும் :
சென்னை மாகாணத்தில் அதிக எண்ணிக்கை கொண்டதாயிருந்தவை இரண்டு சாதிகள் மட்டும்தான்: வன்னியர், பறையர் என்பவையே அவை. 1921 சென்சஸ் கணக்கெடுப்பில் வன்னியர், பறையர் ஆகிய இரண்டு சாதிகள் மட்டும்தான் 20 லட்சத்தைத் தாண்டியவையாக இருந்தன. வன்னியர் மக்கள் தொகை 28,10,000, பறையர் மக்கள் தொகை 23,87,000. மற்ற எந்த சாதியின் மக்கள் தொகையும் 10 லட்சத்தைத் தாண்டவில்லை. 1931 சென்சஸில் வன்னியர் மக்கள் தொகை 29,44,000 ஆக உயர்ந்தது. ஆனால் பறையர் மக்கள் தொகையோ 11,17,000 எனக் குறைந்தது. அதற்குக் காரணம் அவர்களில் பெரும்பாலோர் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தம்மைப் பதிவு செய்துகொண்டதுதான்.
1916 முதல் ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளராக இருந்த எம்.சி.ராஜா1922 இல் அன்றைய நீதிக்கட்சி ஆட்சியின்போது சட்ட மேலவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ‘ அரசுப் பதிவேடுகளில் பறையர், பஞ்சமர் எனப் பதிவு செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக ஆதி திராவிடர் எனப் பதிவு செய்யவேண்டும்’ என அதில் குறிப்பிட்டிருந்தார். அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிக்கட்சி அரசாங்கம் அதை ஒரு அரசாணையாகவும் வெளியிட்டது ( G.O no. 217 law (common) dated 25.03.1922). அதன் பிறகு 1931 இல் இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. நீதிக்கட்சி அரசாங்கம் வெளியிட்ட அரசாணையின்படி பறையர் சமூகத் தலைவர்கள் தமது சமூக மக்களை ஆதிதிராவிடர் எனப் பதிவு செய்யும்படிக் கேட்டனர்.
ஆனால் அப்போதிருந்த சென்சஸ் சூப்பிரண்டெண்டண்ட் யீட்ஸ் என்பவர் அவ்வாறு பதிவு செய்யாமல், சென்சஸ் எடுக்கும்போது யாரெல்லாம் அப்படி கேட்டார்களோ அவர்களை மட்டும் பதிவு செய்யும்படியும் மற்றவர்களை பறையர் என்றே பதிவு செய்யும்படியும் கூறிவிட்டார். இந்த விவரத்தை அந்த அறிக்கையிலேயே அவர் பதிவு செய்திருக்கிறார்: “ பஞ்சமா, பறையா ஆகிய பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது எனத் தடை செய்து அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆணை குறித்து சென்சஸ் ஊழியர்கள் எனது கவனத்தை ஈர்த்தனர். அந்த அரசாணையை நானும் அறிவேன். ஆனால் அரசாங்கப் பரிவர்த்தனையில் அந்தப் பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது என்றுதான் அந்த அரசாணை கூறுகிறது. தானே ஒருவர் முன்வந்து தன்னை ஒரு பெயரால் அழைத்துக்கொண்டால் அதை அரசாணையோ அல்லது வேறு எந்த உத்தரவோ எப்படி தடுக்க முடியும்?” என அவர் அதில் கேள்வி எழுப்பியிருக்கிறார். ( M. W.M. YEATTS , CENSUS OF INDIA, 1931, Volume XIV, Madras, page 333-334).
சென்சஸ் அதிகாரி ஈட்ஸின் அணுகுமுறையினால் பறையர் எனவும் ஆதிதிராவிடர் எனவும் இரண்டு பெயர்களில் பிரித்து பதிவு செய்யப்பட்ட அந்தத் தவறு இன்றளவும் நீடிக்கிறது. 1931 சென்சஸில் பதிவான பறையர் மக்கள் தொகை 11,17,000, ஆதிதிராவிடர் மக்கள் தொகை 16,19,000. இரண்டையும் சேர்த்தால் 27,36,000. அப்போது பதிவான வன்னியர் மக்கள் தொகை 29,44,000. வன்னியர் சமூகத்தைவிட ஆதிதிராவிடர் ( பறையர் உட்பட) 2 லட்சத்து 8 ஆயிரம் மட்டும்தான் குறைவு.
2011 சென்சஸில் ஆதிதிராவிடர் மக்கள் தொகை 72,42,000 பறையர் மக்கள் தொகை 18,22,000. இந்த சமூகங்களின் கூட்டுத்தொகையான 90,66,000 என்பது தமிழ்நாட்டின் அப்போதைய மக்கள் தொகையான 7.21 கோடியில் 12.56 சதவீதமாகும்.
இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாட்டில் வன்னியர் சமூகமே எண்ணிக்கை அதிகம் கொண்ட சமூகம் என்று முடிவு வரும். ஆனால் எண்ணிக்கையில் அதற்கு இணையான சமூகமான ஆதிதிராவிட சமூகமோ பறையர் – ஆதிதிராவிடர் எனப் பிளவுபடுத்தப்பட்டதால் எண்ணிக்கை பலமிருந்தும் அதை இழந்து நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆதிதிராவிட மக்கள் அல்ல, 1922 ஆம் வருடம் நீதிக்கட்சி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையை சென்சஸ் அதிகாரிகள் கடைபிடிக்காததே ஆகும். பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஆங்கிலேய அதிகாரிகள்தான் அப்படித் தீங்கிழைத்தார்களென்றால் சுதந்திரத்துக்குப் பிறகும் அந்தக் கொடுமை நீடித்து வருகிறது.
சமூக நீதியை நிலைநாட்ட நல்லதொரு வாய்ப்பு!
நீதிக் கட்சியின் ஆட்சியினுடைய தொடர்ச்சிதான் இன்றைய திமுக ஆட்சி என அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அநீதியைக் களைந்து சமூக நீதியை நிலை நாட்ட நல்லதொரு வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்துவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு முன்பாகவே 1922 இல் நீதிக்கட்சி ஆட்சியில் பிறப்பித்த அரசாணையின்படி பறையர் என்ற பெயரை நீக்கி அந்த மக்கள் அனைவரையும் ஆதிதிராவிடர் என்ற பெயரில் அறிவிக்க வேண்டும். எஸ்சி பட்டியலில் உள்ள வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் எவரேனும் தன்னை ஆதிதிராவிடர் என அழைத்துக்கொள்ள விரும்பினால் அவர்களையும் ஆதிதிராவிடர் என உள்ளடக்குவதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவது அவசியம்.
கட்டுரையாளர் குறிப்பு:
முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்னாங்கண்ணி கீரையில் இவ்வளவு நன்மைகள் உண்டா? உடனே சாப்பிடுங்கள்…
அண்ணாமலையை மாற்ற கோரிக்கை வைக்கவில்லை: எடப்பாடி