முரளி சண்முகவேலன், நாடியா சரசேனி
(சர்வதேச மேம்பாடு சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் தடமான இங்கிலாந்தைச் சார்ந்த BOND எனும் அமைப்பு, “Caste and Development: Tackling work and descent-based discrimination for achievement of Sustainable Development Goals for all” எனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முரளி சண்முகவேலன், நாடியா சரசேனி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள அந்த அறிக்கையின் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.)
பிறப்பு மற்றும் தொழில் அடிப்படையிலான பாகுபாடுகள், கிட்டத்தட்ட 20 நாடுகளில் மிகவும் பின்தங்கிய சமூகங்களை மைய நீரோட்டத்திலிருந்து விலக்கி, விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடுகின்றன; மறுபுறம் அதிகாரம் படைத்த சிலருக்கே சமூகத்திலும் பொருளாதாரத்திலும் உள்ள அனைத்துப் பலன்களும் சென்று சேர்கின்றன. ஆழமாக வேரூன்றியிருக்கும் வறுமைக்கும் சமமின்மைக்கும் சாதிப் பாகுபாடுகள் முக்கியக் காரணம். பிறப்பின் அடிப்படையில் சமூகத்தால் ஒருவர்மீது திணிக்கப்படும் சாதி சார்ந்த அடையாளம், கிழக்காசிய மற்றும் வெளிநாடுகளில் வாழும் கிழக்காசிய மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் தங்களுடைய வாழ்க்கையில் பெறும் வாய்ப்புகளின் அளவையும் தன்மையையும் தீர்மானிக்கிறது. இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது தலித்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் “வளங்குன்றா வளர்ச்சி இலக்கு”களை அடைவதில் இருக்கும் முக்கியச் சவால்களுள் ஒன்றாக இந்த வகையான பாகுபாடு பார்க்கப்படுவதில்லை.
சமூகம், பொருளாதாரம், சுற்றுப்புறச்சூழல் தொடர்பான வளங்குன்றா வளர்ச்சிக்கான இலக்குகளுக்கும், பிறப்பு மற்றும் தொழில் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. குறிப்பிட்ட சில வேலை, தொழில்கள் செய்பவர்களை சமுதாயத்திலிருந்து விலக்கி வைப்பது, அவர்களின் உழைப்பைச் சுரண்டி சொத்துகளைக் குவிப்பது போன்ற அவலங்கள், ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் மிகப்பெரிய இடையூறாக அமையும்.
முக்கியமான கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் இடங்களில் அதிகாரம் படைத்த ஒரு சில சாதியினரின் பிரதிநிதித்துவம் மட்டுமே இருப்பது, ஜனநாயக அதிகாரப் பரவலாக்கத்தைத் தடுக்கிறது. சுற்றுச்சூழல் சீரழிந்த பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மக்கள் வாழ நேரிடுகிறது; அதனால் அவர்களுக்குச் சுத்தமான குடி தண்ணீர் கிடைப்பதில்லை. அடிப்படை வசதிகள்கூடப் பெற முடியாத நிலையில் இருக்கும் மக்களால், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் நேரங்களில் அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் கருவிகளைப் பெற முடிவதில்லை. இதற்கெல்லாம் மூல காரணம் பிறப்பு மற்றும் தொழில் அடிப்படையில் நடக்கும் பாகுபாடுகள்.
இவற்றை எதிர்த்துக் கிழக்காசியாவில் தலித் மக்களின் இயக்கங்களும் போராட்டங்களும் வலுப்பெற்றுவருவதோடு, உலகின் மற்ற பகுதிகளில் பிறப்பு, தொழில் அடிப்படையிலான பாகுபாட்டின் காரணத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களோடு தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவு அளித்துவருகின்றன.
சாதி ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கங்கள்
வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளை அடைய நாம் மேற்கொள்ளும் பயணத்துக்கு மிகப்பெரும் சவாலாகச் சாதி இருக்கிறது. ஒரு முனையில் காணும் முன்னேற்றத்தை, பலமுனைகளில் சாதி ஏற்படுத்தும் தடங்கல்கள் தவிடுபொடி ஆக்கிவிடுகின்றன. சாதி எனும் மிகப்பெரிய சவால் எந்தெந்த முனையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்.
கல்வி: தரமான கல்வி என்பது அதிகாரம் படைத்த சாதியினருக்கு மட்டும்தான் என்ற கருத்து இன்றும் தெற்காசிய நாடுகளில் பரவலாக இருந்துவருகிறது. பல சமூக – பொருளாதாரத் தடைகளைத் தாண்டிதான் தலித்துகள் தங்களுடைய பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளில் ஆரம்பக் கல்வி பெறுவதில் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் தலித்துகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளி குறைந்துள்ளது என்றாலும், இன்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பலருக்கும் அந்த வாய்ப்பு எட்டாக்கனியாகவே உள்ளது. இதில் அதிகம் விடுபட்டிருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே. பொருளாதார நெருக்கடிகள், பாலியல் தொல்லைகள், போக்குவரத்து வசதியின்மை, ஆதிக்கச் சாதியினர் குடியிருப்பின் அருகில் பள்ளி இருப்பது எனப் பல காரணிகள் பெண்களின் கல்வி வாய்ப்புகளைப் பறித்துவிடுகின்றன.
இது போதாதென்று, தொடர்ந்து தனியார்மயமாக்கப்பட்டுவரும் கல்வியைப் பெறுவதற்கான பொருளாதார வளங்களைத் திரட்டுவதற்குப் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. அதனால் அரசுப் பள்ளிகளில் அதிகமாகக் காணப்படுபவர்கள் தலித் குடும்பத்துப் பிள்ளைகளே. விடுதிகள், ஊக்கத்தொகை வழங்குவதிலும் இருக்கும் பாகுபாடுகள், மேற்படிப்பு மேற்கொள்வதற்கு இடையூறாக அமைகின்றன; இதன் எதிர்மறை விளைவுகள் கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படாத இடங்களாகவும், மிகவும் சொற்பமான வேலைவாய்ப்புகளாகவும் வெளிப்படுகின்றன.
அனைவருக்குமான வளர்ச்சி, வேலை: தலித்துகளின் உழைப்பைச் சுரண்டி, அதை எதிர்ப்பவர்களின் மீது வன்முறையைப் பயன்படுத்தி, அவர்களை விளிம்பு நிலையிலேயே வைக்கும் பொருளாதார அமைப்புதான் இன்றும் நிலவுகிறது. முறைசார்ந்த, அதிக ஊதியம் ஈட்டக்கூடிய தொழில்களில் தலித்துகளின் பங்கு குறைவாகவும், எந்தப் பாதுகாப்புமற்ற முறைசாராத் தொழில்களில் அவர்களின் பங்கு அதிகமாகவும் இருக்கிறது. சமுதாயத்தில் சாதி வேறுபாடு உருவாக்கும் சமமற்ற அதிகாரப் பகிர்வால், பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் மிகவும் பின்தங்கி இருக்கும் மக்களைச் சென்றடைவதில்லை.
இந்தியாவில் தொழில்கள் எந்த அளவுக்கு சாதியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைச் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization) ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் காரணமாக, நவீனப்படுத்தப்பட்ட துறைகளில் உருவாகும் லாபகரமான வேலைவாய்ப்புகளை அவர்கள் பெற முடியாமல் போகிறது. அதிகாரம் படைத்த சாதியினரைவிட தலித் மக்கள் பன்மடங்கு உழைப்பைச் செலுத்துவதாக உலக வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மிகக் குறைவான ஊதியம் தரும் வேலைவாய்ப்புகளில் தலித் பெண்கள் அதிகம் இருப்பதும், உழைப்புப் படையில் பிற சாதிப் பெண்களைவிட இவர்களின் பங்கு அதிகமாக இருப்பதும் தெரியவருகிறது. சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே தங்கள் உழைப்பைச் சுரண்டும் பொருளாதார உறவுகளிலிருந்து தலித்துகள் தங்களை விடுவித்துக்கொள்ள முடியும். அடிமைத்தனத்தின் சமகால வடிவங்களைப் பற்றி ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பதிவாளர், உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் நவீன அடிமைத்தனத்துக்கு முக்கியக் காரணிகள் என்பதைப் பதிவு செய்துள்ளார்.
ஏற்றத்தாழ்வு: உலகளாவிய உற்பத்தி / மதிப்புக் கூட்டல் சங்கிலித் தொடர்கள் (global supply / value-added chains) இன்று அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்றன. தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை வலுவிழக்கச் செய்வதாலும், ஏற்றுமதிச் சந்தையில் உற்பத்திச் செலவைக் குறைப்பதாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களே. சமுதாயத்தில் ஏற்கனவே நிலவும் சமூக – பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தனியார் நடத்தும் சொத்துக் குவிப்பால் வேகமான பொருளாதார வளர்ச்சி எனும் தோற்றம் ஏற்படுகிறது; இத்தகைய வளர்ச்சியினை அடைய விளிம்பு நிலை மக்களுக்கு எந்த இழப்பீடும் வழங்காமல், அவர்களின் நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது என்று பொருளாதார அறிஞர் ஜெயதி கோஷ் கூறுகிறார்.
மிகவும் பின்தங்கி இருக்கும் மக்களின் பன்முக வறுமைக்கு மிக முக்கியக் காரணமாக சாதி இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, சொத்து ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் சாதி வேறுபாடுகளை ஆராய்ந்த பொருளாதார அறிஞர் அஸ்வினி தேஷ்பாண்டே, இந்தியாவின் பல மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி மேற்கூறிய வேறுபாடுகளைக் குறைக்கவில்லை என்றும் சில மாநிலங்களில் அவை அதிகரித்திருக்கின்றன என்றும் கண்டுபிடித்துள்ளார். இத்தகைய நிலையில், தலித் மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக நடைமுறையில் இருக்கும் அரசுத் திட்டங்களுக்குச் செய்யப்படும் செலவு சமீபகாலங்களில் தொடர்ந்து வெட்டப்பட்டுவருவதை தலித்துகளின் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள் பதிவு செய்துள்ளன. நடைமுறையில் இருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்களும் தலித்துகளுக்குப் போகாமல் இருப்பதற்குக் காரணம், அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததும், அதுபற்றிய தகவல்கள் அவர்களுக்குக் கொண்டு சேர்க்கப்படாமல் இருப்பதும் ஆகும்.
பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்: சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் காரணமாக, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்கூட இல்லாத மிகவும் ஒதுக்கப்பட்ட, தனித்துவிடப்பட்ட இடங்களில்தான் வாழ வேண்டியிருக்கிறது. இதனால், பருவநிலை மாற்றங்களின் தாக்கம் இவர்களின் மீது அதிகமாக இருக்கிறது. மிகவும் கொடிய வறட்சி அல்லது வெள்ளம் வரும்போதெல்லாம், அவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள எந்தப் பாதுகாப்பும் இல்லாததால், தங்கியிருக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறி வேறு இடம் சென்று புகலிடம் தேடிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தப் பாதிப்புகளின் சுமைகளை அதிகம் தாங்கிக்கொள்வது பெண்களே. தண்ணீர், எரிசக்தி, கால்நடைகளுக்குத் தீவனம் ஆகியவற்றுக்கு இயற்கைச் சார்ந்திருக்கும் குடும்பங்களின் பெண்கள், பருவநிலை மாற்றத்தால் இந்த வளங்களைத் தேடி மேலும் வெகுதூரம் நடந்து செல்ல நேரிடுகிறது. இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை மறுநிர்மாணம் செய்ய உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இந்த முயற்சியை மேற்கொள்ளும்போது சாதி அடிப்படையில் நிலவும் பாகுபாடுகளால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் விடுபட்டுப் போய்விடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உரிமைகள், நியாயங்கள் பெறுவது: தலித் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்போதும், அவர்கள் வாழ்வில் சாதிக்கும்போதும் ஆதிக்கச் சாதியினர் அவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவது போதிய அளவுக்குப் பதிவாகி உள்ளது. 2004-2014 காலத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை 44 விழுக்காடு அதிகரித்திருப்பதாக இந்தியாவின் தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (National Crime Records Bureau) தெரிவிக்கிறது. தலித்துகளுக்கு எதிராக ஏவிவிடப்படும் வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களுக்கு நியாயம் வழங்கவும் சட்ட ரீதியான ஏற்பாடுகள் இருப்பினும் இந்த அவலம் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக, தலித் குடும்பத்துப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். தங்களுக்கு நியாயம் கிடைக்க, வழக்குகள் போட்டு நீதிமன்றங்களை நாடினாலும், நாட்டில் சட்டங்களையும் நீதியையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் நிறுவனங்களில் நிலவும் சாதிப் பாகுபாடுகளின் காரணத்தால் தலித் மக்களின் முயற்சிகள் வெற்றி பெறுவதில்லை. அரசியல் களத்தில் தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்க தலித் அரசியல் கட்சிகள் தோன்றியுள்ளபோதும், பல சமூகக் காரணிகள் அவர்களின் வெற்றிக்கு முட்டுக்கட்டைப் போடுகின்றன.
மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள்
சாதி அடிப்படையிலான பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் மிகவும் பரவலாக இருக்கின்றன என்பதற்கும், அவை பொருளாதார மற்றும் பாலினம் அடிப்படையிலான பாகுபாடுகளோடு பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்கும் வலுவான ஆதாரங்கள் பல இருந்தாலும், தேசிய அளவில் அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் இல்லாததால், இதுபோன்ற பாகுபாடுகளை அடையாளம் கண்டு களைவது பெரும் சவாலாக இருக்கிறது. 2015இல் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் உலகின் அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட “2030 வளங்குன்றா வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரல்”, பிறப்பு மற்றும் தொழில் அடிப்படையிலான பாகுபாடுகளை அடையாளம் கண்டு, உடனடியாக அவற்றை அகற்றுவது அரசுகளின் பொறுப்பு என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
சாதிப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் துயரம், வேதனை மிகுந்த அனுபவங்களைப் பதிவு செய்தல் அவசியம். புள்ளிவிவரங்கள் மட்டுமே ஆதாரங்கள் அல்ல; பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை அறிந்துகொண்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளுக்கும் மனித உரிமைகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு; சாதிப் பாகுபாடு என்பது சமூக அவலம் மட்டுமின்றி, மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் என்பதை உணர்ந்து, அவற்றை அறவே களைந்தெறிய உரிய ஏற்பாடுகள் அனைத்து நிலைகளிலும் எடுக்கப்பட வேண்டும்.
சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராகக் கிழக்காசியாவில் தலித் மக்கள், அநீதிக்கு எதிராகவும் தங்கள் உரிமைகளுக்காகவும் ஒருங்கிணைந்து குரலெழுப்பி வருகின்றனர். அவர்களின் குரலுக்கு செவி சாய்த்து, அவர்களின் பங்கேற்போடு அரசுகளும் சமுதாயமும் எடுக்க வேண்டிய நேர்மறையான நடவடிக்கைகள் சிலவற்றின் பட்டியலைப் பார்ப்போம்:
1. தலித்துகளைப் பாதுகாக்கும் சட்டங்கள்
2. வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
3. கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது
4. உரிமைகள், வாழ்வாதாரங்களை உறுதி செய்வது
5. ஏற்றத்தாழ்வுகளைக் களையும் நிதி ஒதுக்கீடுகள் செய்வது
6. கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது
7. அனைவரையும் உள்ளடக்கிய சந்தைகளை உருவாக்குவது
8. சமூகப் பொறுப்போடு இயங்கும் தனியார் துறையை வளர்ப்பது
9. அதிகாரம் பரவலாக்கப்பட்ட ஜனநாயக நிறுவன ஏற்பாடுகளை அமைப்பது
10. தலித் மக்களின் குரலுக்கு வலுசேர்க்கும் ஊடகங்கள், தொழில்நுட்பங்கள்
சாதி எனும் பெருந்தடையை அகற்றினால்தான் வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளை அடைய முடியும் என்பதை உணர்ந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அரசுகளும் செயல்பட வேண்டும். சாதிப் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வாழ்வு அமைத்துத் தருவதாய் நினைத்து, அவர்களுக்கு மேலும் தீங்கு ஏற்படாத வண்ணம் இடையீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புள்ளிவிவரங்கள் சேகரிப்பது மட்டுமின்றி, சமுதாயத்தின் விழுமியங்களை முற்போக்கான திசையில் திருப்பிவிடுவது, தலித் மக்களுக்காக வடிவமைக்கப்படும் கொள்கைகளில் அவர்களின் பங்களிப்பை உறுதிசெய்வது, அதிகாரத்தைப் பரவலாக்குவது எனப் பலதரப்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டால்தான் தலித் மக்களின் மனித உரிமைகள் காக்கப்படும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். இவற்றை உறுதிசெய்தால்தான் வளங்குன்றா வளர்ச்சி சாத்தியமாகும்.
தமிழில்: நா.ரகுநாத்
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[முரளி சண்முகவேலன் முழுமையான கட்டுரைக்கு]
https://minnambalam.com/political-news/special-column-murali-shanmugavelan/
https://minnambalam.com/political-news/covid19-attack-also-world-democracy/