கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு தொடங்கிய போராட்டம் தற்போது சாதி பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. கள்ளக்குறிச்சி வன்முறைக்கு இவர்கள் தான் காரணம் என ஒரு குறிப்பிட்ட சாதி மீது உளவுத்துறை கை காட்டுவதாக தி இந்து நாளிதழில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவி மரண விவகாரத்தில் பள்ளிக்கு எதிராக ஆரம்பமான போராட்டம் வன்முறையாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளி மற்றும் போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
தி இந்து நாளிதழின் செய்திப்படி, இந்த வன்முறைக்குப் பின்னால் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளதாக உளவுத்துறையிலிருந்து மூத்த போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல் சென்றுள்ளது. அந்தப் பள்ளியின் கரஸ்பாண்டெண்ட் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அதனால் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்திருக்கிறதாம்.
கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சிலர், வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் என கூறி பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்களை காவல்துறையில் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவி அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு எதிராக அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிதிராவிடர்களுடன் இணைய வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அச்சத்தில் உள்ளதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மற்றொரு புறம் கவுண்டர்கள் வன்னியர்களுடன் இணைய வாய்ப்புள்ளதால் சாதி மோதல் ஏற்படும் பதற்றமான சூழல் நிலவுவதாக உளவுத்துறை காவல்துறையை எச்சரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தலித் மாணவ அமைப்பினர் மற்றும் அமமுகவைச் சேர்ந்த சிலர் இந்த வன்முறைக்குப் பின்னால் இருப்பதாகக் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் குற்றம்சாட்டுவதாக காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது. இந்த சமூகத்தினருக்குச் சொந்தமான 20 பள்ளிகளில் படிக்கும் பட்டியலின மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தி இந்து தமிழில் இந்த செய்தி வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உளவுத்துறை மற்றும் தமிழக அரசுக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றியதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது, உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் ஸ்ரீமதியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியில் வெளியான தகவல்கள் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் சமூக நீதி எழுத்தளவு மட்டுமே இருக்கிறது. கள்ளக்குறிச்சி கலவரத்தைக் கள்ள மௌனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர், அவர்களது இயலாமையை ஒரு சமுதாயம் தலையில் இறக்கி வைப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேடையில் முற்போக்குத்தனமாகப் பேசுவதும் நிஜ வாழ்வில் பிற்போக்குத்தனமாக இருப்பதும் திமுக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல என்றும், திமுக ஆட்சியில் கலவரங்களும் புதிதல்ல, இப்படி கலவரங்கள் முடிந்த பின் அதற்குப் பட்டியலின மக்களை வஞ்சிப்பதும் புதிதல்ல என்றும் விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
சாதி மோதலுக்குள் சென்று பிரச்சினையைத் திசை திருப்பாமல், மாணவியின் மரணம் மற்றும் கலவரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் தொடர்பாக முறையாக விசாரித்து எது உண்மையோ அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
அப்துல் ராஃபிக்