தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்று வைக்கப்பட்ட சாதி அமைப்பினரின் பேனர்களை தமிழ்நாடு அரசின் வருவாய் துறையினர் இன்று (ஏப்ரல் 19) காலை அகற்றியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றும் இன்றும் (ஏப்ரல் 18, 19) ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஆளுநரை நேற்று ராமநாதபுரத்தில் தேவர் சமூக பிரதிநிதிகளும், தேவேந்திர குல வேளாளர் சமூக பிரதிநிதிகளும் சந்தித்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர். ஆளுநரோடு நின்று நிதானித்து போட்டோ எடுத்துக் கொண்டனர். இதுபற்றிய தகவல்களை தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் டிவிட்டர் பக்கத்திலேயே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று மாலை ஆளுநர் ரவி பரமக்குடியில் இருக்கும் தேவேந்திர குல மக்களின் அடையாளமாக கருதப்படும் இமானுவேல் சேகரனின் நினைவிடத்துக்கும், முக்குலத்து மக்கள் தெய்வமாக வணங்கும் முத்துராமலிங்க தேவர் நினைவிடமான பசும்பொன்னுக்கும் சென்று மரியாதை செலுத்த இருக்கிறார்.
ஆளுநர் பயணத்தில் இன்று பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடம் செல்லும் வழியில் பரமக்குடி ரயில் நிலையம் அருகே… ஏதோ அரசியல்வாதியை போல சாதிப் பிரமுகரைப் போல ஆளுநரை வரவேற்று பேனர்களை ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் வைத்திருந்தனர். வரிசையாக கொடிகளையும் கட்டி வைத்திருந்தனர். இந்த பேனர்களையும் கொடிகளையும் பார்த்த பரமக்குடியில் வசிக்கும் மக்கள் மின்னம்பலத்தை இன்று (ஏப்ரல் 19) காலை தொடர்புகொண்டனர்.
“எங்களுக்கு ஏதோ பயமாக இருக்கிறது. ஆளுநர் வருகை அரசியல் வாதியின் வருகையை போலவும் சாதி சங்கத்தினரின் வருகையை போலவும் சித்திரிக்கப்படுகிறது. இதை வெளியூரில் இருந்து பார்ப்பவர்களுக்கு கொடிகள்தானே, பேனர்கள்தானே என்று தோன்றும். ஆனால் இங்குள்ளவர்களுக்குதான் இதன் பின்னால் நடக்கப் போகும் விளைவுகளும் வலியும் தெரியும். யாராவது ஏதாவது இந்த பேனர்களை செய்துவிட்டால் இந்த ஏரியாவின் நிம்மதிதான் போகும். மின்னம்பலத்துக்கு இதைத் தெரிவித்துவிட்டு இங்குள்ள வருவாய் துறையினருக்கு தெரிவித்தோம்.
ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கு பல நிர்ப்பந்தங்கள் இருப்பதால் அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. இதனால் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருக்கும் சிலருக்கு இன்று காலை தெரிவித்திருக்கிறோம்” என்றனர்.
நாம் இந்த செய்தியை எழுதிக் கொண்டிருக்கும்போதே சில மணித் துளிகளில் பரமக்குடியில் இருந்து நமக்கு அழைப்பு, “இன்று காலை 10 மணிக்கு வருவாய் துறையினர் இந்த பகுதிக்கு வந்தனர். அனுமதியில்லாமல் ஆளுநரை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்களையும் கொடிகளையும் அகற்றியிருக்கிறார்கள்” என்று அப்டேட்டும் கொடுத்தனர்.
வருவாய் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “நேற்று நாங்கள் அனுமதி கொடுக்காதபோதும் இரவு 10.30க்கு மேல் கொடிகளையும் பேனர்களையும் வைத்துள்ளனர். இதற்கு பதிலடியாக வேறு ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டுவிட போகின்றன என்று எங்களுக்கு சிலர் தகவல் கொடுத்தனர். காலையில் சென்னையில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன. இது பதற்றத்துக்கு வழி வகுத்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக இன்று காலை 10 மணியளவில் பேனர்களையும் கொடிகளையும் அகற்றியிருக்கிறோம்” என்றனர்.
இதேநேரம் ஆளுநரை வரவேற்று இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூர் கிராம மக்கள் ஆங்கிலத்தில் பேனர் ஒன்றை சாலையோரம் வைத்துள்ளனர்.
–வேந்தன்