BJP's politics of rejecting pluralism

ஜாதியும், நீதியும்: பன்மைத்துவத்தை மறுக்கும் பாஜக அரசியல்

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை    

பன்மைத்துவம் என்பது ஆபத்தானதோ, ஒற்றுமைக்கு எதிரானதோ அல்ல. சாதாரணமாக ஒரு குடும்பத்துக்குள்ளேயே சகோதர, சகோதரிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் குறிக்க “ஐந்து விரல்களும் ஒன்றுபோலவா இருக்கின்றன?” என்று கேட்பார்கள். விரல்களின் அளவு வேறுபட்டு இருப்பதால் அவை கரத்திலிருந்து பிரிந்து போவதில்லை. பாமர மக்களே இவ்வளவு தெளிவாக பன்மையைப் புரிந்து கொண்டாலும், பாஜக பன்மையைக் கண்டு அஞ்சுகிறது. வரலாற்று ரீதியாக மக்களிடையே பல்வேறு சமூகவியல் வித்தியாசங்கள், வேறுபாடுகள் உருவாகியுள்ளதை அங்கீகரிக்காமல், அதனடிப்படையில் அவர்கள் தேவைகளை புரிந்துகொண்டு சட்டத்திட்டங்களை வகுக்காமல் நாட்டை ஒன்றுபடுத்துவதோ, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதோ கடினம். BJP’s politics of rejecting pluralism

இரண்டு அம்சங்கள், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த அம்சங்கள் இன்று இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஜாதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் அறிவது. இரண்டாவது அதற்கேற்றார்போல பின் தங்கிய வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இட ஒதுக்கீடுகளை மேற்கொள்ள, பொருளாதார நலத்திட்டங்களை மேற்கொள்ள மாநிலங்களுக்கு சுயாட்சி உரிமைகளை வழங்குவது. வரி விதிப்பதிலும், நிதி மேலாண்மையிலும் மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கினால்தான் அந்தந்த மாநிலங்களில் உள்ள பின் தங்கிய, ஏழை மக்களுக்கான திட்டங்களை மாநில அரசுகளால் உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்றபடி திட்டமிட்டுச் செயல்படுத்த முடியும். ஆனால் பாஜக இந்த முக்கியமான அரசியல் பிரச்சினைக்கு முகம் கொடுக்க மறுப்பதுடன், அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் குவிப்பதிலும், ஜாதிகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை மறுப்பதிலும் முனைப்புக் காட்டுகிறது.

ஜாதிகளின் இருப்பை மறுக்கும் பிரதமர்

சட்டீஸ்கர் மாநில தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது பிரதமர் மோடி, “இந்தியாவில் ஒரே ஒரு ஜாதிதான் உள்ளது – அது ஏழை ஜாதி” என்று பேசியுள்ளார். கேட்பதற்கு முற்போக்காகத் தெரியும் இந்தப் பேச்சு, இந்தியா கூட்டணி ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்துவதை மறுக்கத்தான் என்பது வெளிப்படையானது. எதனால் இப்போது ஜாதிவாரியாக சென்சஸ் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வதும் முக்கியம்.

சமகால உலகில் பல்வேறு புதிய தொழில்கள், சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற திறன்கள் உருவாகியுள்ளன. ஆனால் இவற்றில் பங்கேற்பது பெரும்பாலும் முன்னேறிய வகுப்பினராகவே உள்ளனர். பின் தங்கிய வகுப்பினர் மக்கள் தொகையில் பெரும்பாலானோராக இருந்தாலும் அவர்கள் உயர்கல்வியிலோ, மதிப்புமிக்க, செல்வாக்கு மிக்க தொழில்களோ அதிகம் இடம்பெறுவதில்லை. நாடு சுதந்திரம் அடைந்தவுடன் முதலில் பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், அவர்களும் இன்னும் பிற சமூகத்தினர் போல உயர்பதவிகளில், சமூக மதிப்புமிக்க, அதிகாரமுள்ள பணிகளில் இடம்பெறுவது கணிசமாக இல்லை. பிற்படுத்த வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சுதந்திரம் பெற்று நாற்பதாண்டுகளுக்கு பிறகுதான் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட 27% என்பது போதுமானவரை அவர்களை பல்வேறு துறைகளில் உள்ளடக்கவில்லை.

உதாரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 604 என்னும்போது அதில் 458 பேர் முன்னேறிய வகுப்பினர் என்றும், பதினெட்டு பேர் பட்டியல் ஜாதியினர், ஒன்பது பேர் ஆதிவாசிகள், 78 பேர் பின் தங்கிய வகுப்பினர் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இது போல பல்வேறு துறைகளில் இன்னமும் பல்வேறு ஜாதியினர் பங்கேற்க இயலாமல்தான் உள்ளது. இதையெல்லாம் சரி செய்யவும், அனைத்து ஜாதியினரும் அனைத்து துறைகளிலும் பங்கேற்கும் சூழலை உருவாக்கவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அவசியமாகும்.

BJP's politics of rejecting pluralism


இந்தக் கணக்கெடுப்பை மாநில அரசுகள் செய்தால் அது அதிகாரபூர்வமானதாக அங்கீகரிக்கப்படாமல் போகலாம். ஏனெனில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பட்டியலில்தான் உள்ளது. எனவேதான், அதிகாரபூர்வமான சென்சஸ் கணக்கெடுப்பில் ஜாதியை உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.

இவ்வளவு சிக்கலான ஒரு பின்னணியை உதாசீனம் செய்யும் வகையில் பிரதமர் நாட்டில் உள்ள ஒரே ஜாதி ஏழைகள் என்ற ஜாதிதான் என்று பேசியிருப்பது தவறான போக்காகும். ஏழ்மை என்பது வேறு; சமூக ஏற்றத்தாழ்வு, விலக்கம் என்பது வேறு. இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளாததுபோல நடிப்பதன் மூலம்தான் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீடு என்ற, அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பான ஓர் இட ஒதுக்கீட்டை முன்னேறிய வகுப்பினரில் ஏழைகளுக்காக பாஜக அரசு கொண்டுவந்தது. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார வறுமையைப் போக்கும் திட்டம் அல்ல. சமூக ஏற்றத்தாழ்வை, விலக்கங்களை சரிசெய்யும் முறை என்பதை திட்டமிட்டே குழப்புவதற்கான முயற்சிதான் Economic Weaker Section என்ற பெயரில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார நலிவுற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது.

பல்வேறு வகையான சமூக அடுக்குகளில், கலாச்சார வெளிகளில் இயங்கும் ஜாதிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து பொதுவாழ்வில் அவர்கள் பங்களிப்பை அதிகரிக்க செய்வதற்கு பதிலாக, எல்லோரையும் ஏழைகள் என்ற ஒற்றைப் பிரிவில் வைத்து பார்ப்பது மிகவும் பிற்போக்கான பார்வையாகும். இது சமூகப் பன்மையை மறுப்பதன் மூலம் சமூக நீதியை மறுப்பதாகவே இயங்கும்.

அப்படி உண்மையிலேயே மோடியும், பாஜக-வும் ஏழைகளுக்காக கவலைப்படுவதாக இருந்தால் ஏன் இந்த அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தை பலவீனப் படுத்துகிறது? அதை விரிவுபடுத்தி ஏழைகளுக்கு அதிக வருவாய் கிடைத்திட வழிவகை செய்யலாமே? ஏழை மக்களின் நலனுக்காக எத்தனை திட்டங்களை பாஜக நடைமுறை படுத்தியுள்ளது? கார்ப்பரேட்டுகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும், அவர்களுக்கு வங்கிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி அள்ளித் தரவும், வரிவிலக்குத் தரவும் முன்னுரிமை தரும் அரசு, ஏழை மக்களுக்கு முன்னுரிமை அளித்து என்னவெல்லாம் செய்தது என்று கூற முடியுமா?

ஜாதீய சமூகங்களும், மாநில அரசியலும்

ஒவ்வொரு மாநிலத்திலும் ஜாதீய சமூக அடுக்குகள், கலாச்சாரப் பின்புலங்கள் வேறுபடுவதைக் காணமுடியும். இவற்றினுள் சில ஒப்புமைகளைக் காணலாம் என்றாலும், ஒவ்வொரு மாநிலத்தின் சமூக கட்டமைப்பும் நீண்ட நாள் பண்பாட்டு வரலாற்றின் விளைபொருள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். உதாரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜர் சமூகத்தினரின் சமூக நிலை என்ன, அந்த சமூகத்தில் உட்பிரிவுகள் உண்டா, இவர்களது தேவைகள் இன்றைய நிலையில் என்ன, இவர்களது கோரிக்கைகள் என்ன என்பதை அந்த மாநிலத்தின் சமூக அரசியல் பொருளாதாரப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள முடியும்.

அதே போல, குஜராத் மாநிலத்தில் உள்ள படிதார் வகுப்பினர் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான வாழ்வியல் சூழல்களில் உள்ளனர் என்றால், அவர்களை எப்படி வகைப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான முன்னுரிமைகளை எப்படி வழங்குவது என்பதை அந்த மாநிலத்தின் அரசியல் சூழலில்தான் தீர்மானிக்க முடியும். BJP’s politics of rejecting pluralism

பஞ்சாப் என்று வந்தால் சீக்கியர்களில் உள்ள தலித் பிரிவினர், விவசாய சமூகத்தினர் போன்ற வகைப்பாடுகளை பிற மாநிலத்தவர் புரிந்துகொள்வது கடினம். அந்த மாநில அளவிலான புரிதலை ஒட்டியே அங்கே சமூக நீதிக்கோட்பாட்டை உருவாக்க முடியும்.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் சமூக நீதி என்பதும், மாநில உரிமைகள், மாநில சுயாட்சி என்பதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என்பதைத் துல்லியமாக உணரலாம். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சி என்பது சமூக நீதி பார்வையை தொடர்ந்து கடைப்பிடித்ததால், அனைத்து ஜாதிகளும் பரவலாக முன்னேற்றத்தில் பங்கேற்கும் சூழல் உருவாகியது. இது முழுக்க முழுக்க மாநில அரசியல் முன்னெடுப்பில் மட்டுமே நிகழ முடியும். இதன் விளைவாகத்தான் மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு என்பது போன்ற சமூக வடிகட்டல் முயற்சிகளை எதிர்ப்பதில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது.

மக்களாட்சி முறையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்பது மாநில மக்களின் அதிகார பங்கேற்பிற்கு அதிக முக்கியத்துவம் என்பதாகவே பொருள்படும். அந்த நிலையில்தான் அனைத்து ஜாதியினருக்குமான சமூக நீதி என்பதும் செயலூக்கம் பெறும். அதிகாரம் ஒன்றியத்தில் குவியும்போது இயல்பாகவே முன்னேறிய வகுப்பினருக்கே அது சாதகமாக மாறும். பாஜக காண மறுக்கும், அல்லது மறைக்கும் உண்மை இதுதான்.

BJP's politics of rejecting pluralism

இந்திய மாநிலங்களும், உலக நாடுகளும்

இந்திய மாநிலங்கள் 28-இல், 19 மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டவை. பத்து மாநிலங்கள் ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டவை. இதை உலகிலுள்ள நாடுகளுடன் ஒப்பிட்டால், 192 ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர் நாடுகளில் நூறு நாடுகளுக்கும் அதிகமானவை ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்டவை. முப்பது நாடுகள் மட்டுமே ஐந்து கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்டவை. உலக அரசியல் அமைப்பு இப்படி அமைந்திருக்கும்போது நூற்று நாற்பது கோடி மக்களைக் கொண்ட இந்தியா ஒற்றை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி நினைப்பது எவ்வளவு முரண்பாடானது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.

மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகத்தான் “ஓரே நாடு, ஒரே தேர்தல்” என்ற விபரீத திட்ட த்தை செயல்படுத்த முனைகிறது பாஜக அரசு. மாநிலங்களுக்கான தேர்தல் தனியாக நடக்கும்போது, அந்த மாநிலத்தின் அரசியல் அமைப்பு, சமூகப் பரப்பு, அதிலுள்ள ஜாதீய சமூகங்கள், அவர்கள் கோரிக்கைகள் ஆகியன அனைத்தும் மக்களின் கவனத்திற்கு வரும். ஊடகங்களில் அலசப்படும். அது மாநிலங்களின் உரிமைக் கோரிக்கைகளை வலுப்படுத்தும். மாநில சுயாட்சி என்ற இன்றியமையாத கோரிக்கையை நோக்கி அனைவரையும் கொண்டு செல்லும்.

அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றியத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் தனித்தனி மாநிலங்களின் அரசியல் வடிவமைப்பிற்கு கவனம் கிடைக்காது. அந்தந்த மாநிலங்களின் சமூகவியல் தனித்துவம் வெளியில் தெரியாமல், வலுப்பெறாமல் போகும். ஒன்றியத் தேர்தலில் கவனம் குவித்து, மாநில தேர்தல்களுக்கு முக்கியத்துவமின்றி போகச் செய்யலாம் என்பதே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதன் நோக்கம்.

இப்போதே ஒரு விஷயம் துல்லியமாகத் தெரிகிறது. குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களைத் தவிர, வேறு எந்த மாநிலத்திலும் பாஜக-வால் தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு முதல் பெரிய கட்சியாக பரிணமிக்க முடியவில்லை. அதாவது ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பத்து மாநிலங்களில், இரண்டில்தான் அதன் செல்வாக்கு வலுவாக உள்ளது. மற்ற எட்டு மாநிலங்களிலும் அது பின் தங்கித்தான் உள்ளது.  மூன்று மாநிலங்களில் அது ஆட்சி செய்ததே இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் மாநில அரசியல் என்பது பின் தங்கிய வகுப்பினர், பட்டியலினத்தவர் ஆகியோரின் அரசியல் அணியாக்கத்தில் இருப்பதால் பாரதீய ஜனதா கட்சியால் அவற்றில் கால்பதிக்க முடியவில்லை. “ஒரே நாடு, ஒரே மதம்” என்றெல்லாம் கூறி, பாகிஸ்தானுக்கும், முஸ்லிம்களுக்கு எதிரான போலியான பகையுணர்வைத் தூண்டி மக்களை தன் வசம் ஈர்ப்பதைத் தவிர அதற்கு வேறு அரசியல் தெரியாததால்தான் அது பன்மைத்துவத்தைக் கண்டு அஞ்சுகிறது. மிரள்கிறது. பன்மைத்துவத்தை மறுதலிக்கிறது. BJP’s politics of rejecting pluralism

 

கட்டுரையாளர் குறிப்பு:

BJP's politics of rejecting pluralism Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: ஃபேஷியல் செய்வது உண்மையிலேயே பலனளிக்குமா?

கிச்சன் கீர்த்தனா: பனீர் சீஸ் பால்ஸ்!

தலைவன் வடை, தொண்டன் முறுக்கு: அப்டேட் குமாரு

காசா மீது அணுகுண்டு? இஸ்ரேலிய அமைச்சர் சர்ச்சை!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *