நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு,
தேமுதிக சார்பில் ஆனந்தன், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.இதனையொட்டி கட்சிகள் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றொருவர் புகாரும், குற்றச்சாட்டுகளும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியர் சமுதாயத்தை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது இன்று(பிப்ரவரி 22 ) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் அருந்ததியினர் சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய சில கருத்துகளை பதிவு செய்திருந்தார்.
இதனால் தலித் அமைப்புகள் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் புகார் அளித்திருந்த நிலையில் அவருக்கு எதிராக தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன.
மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சீமான் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தலித் அமைப்புகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.
இதனிடையே, இன்று (பிப்ரவரி 22 ) கருங்கல்பாளையத்தில் சீமான் மீது போலீசார் சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்தல், சாதிய உணர்வுகளை தூண்டுதல், குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டெல்லி மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வெற்றி..கெஜ்ரிவால் வாழ்த்து!
6 வயதில்தான் ஒன்றாம் வகுப்பு : மத்திய அரசு !