அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
சமூக வலைதளங்களில் தவறான வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய அதிமுக நிர்வாகி நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களும், புதுச்சேரியும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே சென்னை மெரினாவில் பெய்த மழையால், வடியாமல் தேங்கிய மழை நீரில் மின்சாரம் கசிந்ததாக அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் குமார் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் அந்த நிகழ்வு வியாட்நாமின் கேன் தோ நகரில் நடந்ததாக தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் குழு கடந்த 30ஆம் தேதி தெரிவித்தது.
இதனையடுத்து தான் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவை நிர்மல் குமார் நீக்கியிருந்தார்.
இந்த நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக, பொய்யான தகவலை பரப்பியதாக அதிமுக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் விளக்கம் கேட்கவும் போலீசார் தயாராகி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெரியார் நினைவகம் திறப்பு : கேரளா சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
செஞ்சிலுவைச் சங்கக் கட்டடம் மீது தாக்குதல்: 22 பேர் பலி!
எரிபொருள் விலை உயர்வு: இரு அவையிலும் அமளி!