வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் வகையில் கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக கூறி 4 பிரிவுகளின் கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை மீது இன்று (மார்ச் 5 ) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 5 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிற மாநில தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு வேலை அளிக்கும் தொழில் நிறுவனங்களை கண்டித்தும்,
திமுக வின் கூட்டணி கட்சிகளும், திமுக சட்ட மன்ற உறுப்பினருமான வேல்முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் தான் தொடர்ந்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வந்தது நாடறிந்தது.
மேலும் திமுகவின் நிர்வாகிகளும், அமைச்சர்களும் பிற மாநில தொழிலாளர்களை பானி பூரி விற்பவர்கள், காய்ந்த ரொட்டி உண்பவர்கள், கட்டிட கூலிகள் என்றெல்லாம் தரக்குறைவாக, வெறுப்பை கொட்டி விமர்சித்து வந்த நிலையில்,
அவர்களுடைய விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்த அரசு,
தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உறுதியளித்து அறிக்கை விட்டதற்கு அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார துஷ்பிரயோகம்” என்று கூறியுள்ளார்.
மேலும், திமுக ஆதரவு யூ டியூப் சேனல்கள் சில திட்டமிட்ட ரீதியில் வட இந்திய தொழிலாளர்கள் மீதான வெறுப்பை கொட்டி பிரச்சாரம் செய்தது தமிழக காவல்துறையின் கண்களுக்கும், காதுகளுக்கும் எட்டவில்லையா?,
இரு தரப்பினருக்கிடையே பகையை உருவாகும் செயல்களை அவர்கள் செய்ததாக காவல்துறைக்கு தெரியவில்லையா?,
பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், தொலைக்காட்சி விவாதங்கள்,
பொது கூட்டங்களில் தரமற்ற பேச்சு என திமுக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், நாம் தமிழர் சீமான், சில அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பேசியுள்ள அனைத்தும் பொது வெளியில் கொட்டிக் கிடக்கின்றன.
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய தமிழக காவல்துறை தற்போது காவல்துறைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது.
இது போன்ற அச்சறுத்தல்களுக்கெல்லாம் அஞ்சாது பாஜக என்பதை தமிழக அரசும், காவல்துறையும் புரிந்து கொள்ள வேண்டும்.
சட்ட ஒழுங்கு சீர்கேடுக்கான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியவர் கைது!
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்: ஆர்.என்.ரவி
