வேல்ஸ் குழுமத்திற்கு சொந்தமாக புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க விதிகளை மீறி அனுமதி வழங்கியதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (செப்டம்பர் 13) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 5 இடங்கள், சேலத்தில் 3 இடங்கள் மற்றும் மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
மருத்துவக்கல்லூரி தொடங்க விதிமீறல்!
2019ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மஞ்சக்கரனையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனையை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்ற அனுமதி கேட்டதாகவும், இந்த கல்லூரியை தொடங்க 2020ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதி சான்றிதழ் வழங்கியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவக்கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை இருப்பது அவசியம். அதேபோல் மருத்துவமனை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது செயல்பட்டிருக்க வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி சோதனை நடைபெற்று வருகிறது. சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வு குழுவினர் மீது வழக்குப்பதிவு!
தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் டீன் பாலாஜி நாதன், பேராசிரியர்கள் மனோகர், சுஜாதா, வசந்தகுமார் ஆகிய 4 பேர் கொண்ட மருத்துவ குழு ஆய்வு செய்தது.
இந்நிலையில் வேல்ஸ் மருத்துவ கல்லூரியில் போதிய வசதி இல்லாத போதிலும், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காக தவறான அறிக்கை கொடுத்ததாக மேற்குறிப்பிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மறுதலிக்கப்படுமாம் தற்கொலைகள்!