அஸ்ஸாம் மாநில முதல்வர் உத்தரவின் பேரில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை நடத்தி வரும் ராகுல் காந்தி மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான 2வது கட்ட பாரத் ஜோடோ யாத்திரையை இந்திய ஒற்றுமை நீதி பயணம் என்ற பெயரில் நடத்தி வருகிறார். அவருடன் நாள்தோறும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
மேகாலாயாவை கடந்து இன்று (ஜனவரி 23) காலை அஸ்ஸாமில் மீண்டும் யாத்திரை தொடர்ந்தது. ஆனால் கவுகாத்தியை ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் நெருங்கியதை அடுத்து, அவர்களை தடுக்க அம்மாநில போலீசார் தடுப்பு வேலி அமைத்தனர்.
இதனால் காங்கிரஸார் மற்றும் போலீசார் மோதலில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த தடுப்பு வேலியை அகற்றி முன்னேறினர்.
இதனையடுத்து அங்குள்ள யுஎஸ்டிஎம்பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாட இருந்த நிலையில் அதற்கு போலீசார் தடைவிதித்தனர். எனினும் வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் திரண்டிருந்த நிலையில், தான் பயணம் செய்யும் பேருந்தின் மீது ஏறி நின்று அவர் உரையாற்றினார்.
கீழ்ப்படிய வேண்டும் என்று நினைக்கிறார்கள்!
அவர் பேசுகையில், “இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அஸ்ஸாம் முதல்வரை அழைத்தார், பின்னர் முதல்வர் அலுவலகம் உங்கள் பல்கலைக்கழக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. அதன்பேரில் தற்போது என்னை பல்கலையில் நுழைய விடாமல் தடுத்துள்ளனர்.
இது அசாமில் மட்டும் நடக்கவில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளிக்கூடங்களில் இது நடக்கிறது. நீங்கள் பேச விரும்பும் எவருடனும் நீங்கள் பேச அனுமதிக்கப்படுவது முக்கியம்.
உங்களுக்கு சொந்த கற்பனை இருக்கக் கூடாது, உங்கள் சொந்த மொழியில் பேச முடியாது, உங்கள் சொந்த வரலாற்றை கொண்டிருக்க கூடாது மற்றும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் நாட்டின் தலைமைக்கு நாட்டு மக்கள் கண்மூடித்தனமாக கீழ்ப்படிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படியே நடக்கும் என்று அவர்கள் கற்பனை செய்ய வேண்டாம். அது என்றுமே சாத்தியமில்லை” என்று ராகுல்காந்தி பேசினார்.
முதல்வர் உத்தரவு!
இதற்கிடையே அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது எக்ஸ் பக்கத்தில், “இவை அஸ்ஸாம் கலாச்சாரத்தின் பகுதி அல்ல. நாங்கள் அமைதியான மாநிலம். இது போன்ற “நக்சலைட் தந்திரங்கள்” எங்கள் கலாச்சாரத்திற்கு முற்றிலும் புறம்பானது. தடுப்பு வேலியை அகற்ற கூட்டத்தை தூண்டியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய அஸ்ஸாம் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன்.” என்று அசாம் முதல்வர் கூறினார். மேலும் இதுதொடர்பாக வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
Sir, Action is being taken per law. Unruliness and violation of ASL decision, including attempt to change route through force is also being taken up with appropriate agencies. Warm regards. https://t.co/nnayHO25Gl
— GP Singh (@gpsinghips) January 23, 2024
இதற்கு பதில் அளித்த அம்மாநில டிஜிபி ஜி.பி.சிங், ”சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத தன்மை, கூட்டமாக சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்டது என்பதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது” என்று பதிலளித்துள்ளார்.
காங்கிரஸ் அலை வீசும்!
எனினும் தொடர்ந்து நடைபெற்ற யாத்திரை மாலையில் பார்பெட்டாவை வந்தடைந்தது. அங்கு பொதுக்கூட்ட மேடையில் மக்களிடம் பேசிய ராகுல்காந்தி, ”அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு மக்களிடையே வெறுப்பை பரப்புவது, ஒரு மதத்தினரை மற்றொரு மதத்தினருடன் சண்டையிட செய்வது என்பது மட்டுமே ஒரே வேலை.
யாரையும் பயமுறுத்தலாம் என்று அசாம் முதல்வர் நினைக்கிறார், ஆனால் காங்கிரஸ் கட்சி பயப்படவில்லை. அவர்கள் மனதில் பயம் இருப்பதால் என் மீது வழக்குப் பதிவு செய்கிறார்கள். அஸ்ஸாம் மக்கள் காங்கிரஸுடன் நிற்பதால் அவர்கள் பயப்படுகிறார்கள்.
அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலத்தில் வெறுப்பை ஒழித்து அன்பின் கடையை திறக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. நாட்டை ஒன்றிணைப்பதே எங்கள் பணி.
சில நாட்களுக்கு முன்பு, அஸ்ஸாம் முதல்வரின் ட்வீட் ஒன்றைப் பார்த்தேன், அதில் அவர் ’பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் மேல் சாதியினருக்கு சேவை செய்ய பிறந்தவர்கள்’ என்று கூறியுள்ளார். இதைவிட பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களை யாராலும் இழிவுபடுத்த முடியாது.
நீங்கள் அவமதிக்கப்படுகிறீர்கள், நீங்கள் அமைதியாக இருக்கக்கூடாது. உங்கள் கருத்தை முதல்வர் முன் தெரிவிக்க வேண்டும். நான் சொல்கிறேன் ஓபிசி, தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை.
நாட்டின் முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் அசாம் இளைஞர்களை அடக்க முடியாது. அஸ்ஸாமுக்கு அதன் சொந்த வரலாறு, அதன் சொந்த மொழி, அதன் சொந்த கலாச்சாரம் உள்ளது. அதை யாராலும் அழிக்க முடியாது.
பாஜக அரசு அசாம் மக்களை பயமுறுத்த முடியும் என்று நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. இங்குள்ளவர்கள் பயப்படவும் இல்லை, பயப்படவும் மாட்டார்கள். வரும் தேர்தலில் அஸ்ஸாமில் காங்கிரஸ் அலையே நீடிக்கும்” என்று ராகுல்காந்தி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அயோத்தி கோயில் : எதிரும் புதிருமாக நிற்கும் கமல் – ரஜினி
AK63: அஜித் ஜோடியாக நடிக்கப்போவது இவர் தானா?
உச்ச நீதிமன்றம் சென்ற அமைச்சர்கள்: அதிமுக, பாஜக கேவியட் மனு!