கரூரில் தேர்தல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ். தங்கவேல் போட்டியிடுகிறார். இவர் அத்தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தெருமுனை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 31ஆம் தேதி வாங்கல் பகுதியில் தங்கவேலுக்கு ஆதரவாக, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று தெருமுனை பிரச்சாரம் செய்துள்ளனர்.
இதனை தேர்தல் விதி மீறல் என்றும், 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்ல அனுமதியில்லை எனவும் வீடியோ கண்காணிப்பு குழு அதிகாரியும், தாந்தோனிமலை வட்டார வளர்ச்சி அலுவலருமான வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அதனை கண்டுக் கொள்ளாமல், நெரூர் அருகே உள்ள மறவாபாளையம் பகுதியில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்களை பின் தொடர்ந்து வாகனத்தில் இருந்தபடி அதிகாரி வினோத்குமார் வீடியோ பதிவு செய்வதைக் கண்ட அதிமுகவினர் அவரது காரை வழி மறித்துள்ளனர்.
மேலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக ஒன்றிய செயலாளர் மதுசூதனன், ரமேஷ் குமார், கார்த்திக், ஜெகன் ஆகியோர் அதிகாரி வினோத்குமாரை ஒருமையில் ஆபாசமாக திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
சிலர் அவரை தாக்க முயற்சித்த நிலையில், அங்கிருந்த போலீசார் வினோத்குமாரை மீட்டு அனுப்பினர்.
இது தொடர்பாக வினோத்குமார் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வெள்ள நிவாரணம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!
வேலைவாய்ப்பு : எஸ்.எஸ்.சி அறிவிப்பு!