சிதம்பரத்தில் பால்ய திருமணங்கள் நடந்ததற்கான புகைப்பட ஆதாரங்கள் இருக்கும் நிலையில், ஆளுநர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது குழந்தை திருமணம் நடந்ததாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் கூறினார். அதோடு பள்ளி சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடந்ததாகவும், அதனால் அச்சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆளுநரின் குற்றச்சாட்டு குறித்து மின்னம்பலம் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டது.
தீட்சிதர்களின் பிள்ளைகளுக்கு பால்ய திருமணம் நடந்தது நமது விசாரணையில் உறுதியானது. இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என்பதும், அதற்கு பதிலாக ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து மின்னம்பலத்தில் பால்ய திருமணம், இரு விரல் டெஸ்ட்… உண்மை என்ன? – மின்னம்பலம் புலனாய்வு ரிப்போர்ட்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருதோம்.
இந்தசூழலில் கடந்த மே 25 அன்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் சிதம்பரம் தீட்சிதர்களிடமும், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடமும் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு விரல் பரிசோதனை நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அதேசமயம் வற்புறுத்தி கேட்டதால் குழந்தை திருமணம் நடந்ததாக நாங்கள் ஒப்புகொண்டோம். மற்றபடி குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்று சிறுமிகள் சொன்னதாக கூறினார்.
இதுதொடர்பாக சமூக நல அலுவலர்களிடமும், போலீசாரிடமும் நாம் விசாரித்த போது, திருமணம் நடந்த புகைப்பட ஆதாரங்களை மின்னம்பலத்திடம் காட்டினர்.
அதோடு பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியும், அவரது தாயாரும் குழந்தை திருமணம் நடந்தது என எழுதிக் கொடுத்த கடிதத்தையும் காட்டினர்.
இதுகுறித்து மின்னம்பலத்தில் தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம்… மறைக்கப் பார்க்கும் தேசிய குழந்தைகள் ஆணையம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தசூழலில், சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தீட்சிதர்களை அரசு வேண்டுமென்ற பழிவாங்குகிறது. அவர்கள் மீது பொய் வழக்குப் போடுகிறார்கள். இது நியாயமான செயல் இல்லை. அரசிடம் விளக்கம் கேட்டும், சொல்லவில்லை என்று ஒரு வன்மையான குற்றசாட்டை ஆளுநர் முன்வைத்தார்.
தமிழக அரசு சார்பில் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆளுநருக்கு ஒரு முழு அறிக்கை அனுப்பப்பட்டது என்று டிஜிபி சொல்கிறார். ஆனால் எனக்கு விளக்க அறிக்கையே வரவில்லை என்று ஆளுநர் சொல்வது முழு பொய். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் இந்த விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசுகிறார். முதல் நாள் பேசும் போது இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என்கிறார். மறுநாள் பேசும்போது ஆளுநர் சொன்னது உண்மை என்கிறார்.
இதற்கு என்ன அர்த்தம். அதிகாரிகளையே மிரட்டி தான் சொன்னதற்கு சாட்சி சொல்ல வைத்திருக்கிறார் ஆளுநர்.
பத்திரிகைகளில், சிறுமி ஒருவர் பால் சொம்போடு முதலிரவுக்கு செல்லும் படியான புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. குழந்தை திருமண சட்டப்படி இது சட்டவிரோதமாகும்.
இதுபோன்ற சட்ட விரோதத்தில் ஈடுபடும் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுபோன்று தீட்சிதர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தால் ஆளுநர் ஏன் கொந்தளிக்கிறார்.
அவர் தமிழகத்துக்கான ஆளுநரா அல்லது தீட்சிதர்களுக்கான ஆளுநரா. வேண்டுமென்றே தீட்சிதர்கள் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று ஆளுநர் எப்படி சொல்கிறார்.
பொய்யும், புனைசுருட்டும் பேசுகிறவர்கள் அரசியல் வாதியாகக் கூட இருக்க முடியாது. கீழ்தரமான அரசியல்வாதியை விட மோசமாக பேசுகிறார் ஆளுநர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இப்படி எல்லை தாண்டிப் பேசும் ஆளுநர் மீது நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஏன் வழக்குப் போடக்கூடாது. ஆளுநர் மீது வழக்குத் தொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரியா
“தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அமோகம்”: சி.வி.சண்முகம்