அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை கோரிய வழக்கில், எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைகோரி புதிய வழக்கு ஒன்றை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அவர் மனுவில், “ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், இரட்டை தலைமையை மாற்றிவிட்டு ஒற்றைத் தலைமையை உருவாக்கிய முறை உள்ளிட்ட 6 தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த தீர்மானங்கள் அனைத்தும் கட்சி விதிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கட்சி விதிகளுக்கு முரணாக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கும் நியமனங்களை மேற்கொள்வதற்கும் பதவி நீக்கம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை இன்று (ஜூலை 21) விசாரித்த நீதிபதி பிரியா, “இந்த மனு குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டவர், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
ஜெ.பிரகாஷ்