அமைச்சருக்கு எதிரான வழக்கு : தடை விதிக்க மறுப்பு!

Published On:

| By Kavi


“அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடையில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார் ராஜ கண்ணப்பன்.

2021 மார்ச் 27 ஆம் தேதி, கருங்குளம், கோழிபத்தி கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இதையொட்டி, தேர்தல் விதிகளை மீறி, கட்சி கொடி கம்பங்கள், தோரணங்களை கட்டி பிரச்சாரம் செய்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் என்று பேரையூர் காவல் நிலையத்தில் ராஜ கண்ணப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

மற்றொரு வழக்கு

minister raja kannappan
அமைச்சர் ராஜ கண்ணப்பன்

சிவகங்கை, மானா மதுரையில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து அதே ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிகளை மீறி 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரச்சாரம் செய்ய வந்ததாகவும், பட்டாசுகளை வெடித்து இடையூறு ஏற்படுத்தியதாகவும் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் இன்று (ஜனவரி 27)நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது அமைச்சர் சார்பில், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை நீதிபதி வேல்முருகன் ஏற்க மறுத்துவிட்டார். இந்த மனுவுக்கு காவல்துறை மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share