அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 12) உத்தரவிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் விடுவித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தார்.
அதுபோன்று முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் ஐ பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.
இதனிடையே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் கவனிப்பார் என்று தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அறிவித்தார்.
இதைதொடர்ந்து இன்று ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான சூமோட்டோ வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஐ பெரியசாமி தரப்பில் நீதிமன்றம் வழக்கை மறு ஆய்விற்கு எடுத்தது தொடர்பாக நோட்டீஸ் ஏதும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், சென்னையில் உள்ள ஐ.பெரியசாமி வீட்டுக்கும், திண்டுக்கலில் உள்ள அவரது நிரந்தர முகவரிக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதுபோன்று முன்னால் அமைச்சர் வளர்மதி தரப்பில் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று வழக்கை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஜெயச்சந்திரன் அன்றைய தினம் வாதங்களை தொடங்கவும் உத்தரவிட்டார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லியோ படத்துக்கு சிறப்புக் காட்சி ஏன்?: அமைச்சர் பேட்டி!
அமைச்சர் பொன்முடியின் கடையில் பணம், நகை கொள்ளை!