மதுரை சம்பவம் – எடப்பாடி மீது வழக்கு: அடுத்து என்ன?

அரசியல்

மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்டுள்ள வழக்கால் மனம் பதறுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார்.

அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது அதே பேருந்தில் பயணம் செய்த அமமுகவை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து கோஷம் எழுப்பினார். இது தொடர்பான வீடியோவும், எடப்பாடியை விமர்சித்த ராஜேஷ்வரனை விமான நிலையத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் சிலர் தாக்கும் காட்சியும் இணையத்தில் வெளியானது. இதனையடுத்து, ராஜேஸ்வரன் அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

பழனிசாமி முணுமுணுத்தார்

அவரது புகாரில், “மதுரை விமான நிலையத்தில் இறங்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் பஸ் மூலம் வந்துகொண்டிருந்தபோது, அதே பஸ்ஸில் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமியும், அவரது பாதுகாவலர் கிருஷ்ணன், ஊர் பெயர் தெரியாத நபரும் வந்தனர். நான் ஏற்கெனவே அதிமுகவில் பணியாற்றி வந்தேன்.

case against edappadi on madurai incident is mkstalin stunt

கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்ததும், கொல்லைப்புறமாக தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிமுகவை கைப்பற்றிய பழனிசாமி என்னைப்பார்த்து ஏதோ முணுமுணுத்தார். நான் துரோகி என்று முழக்கமிட்டேன். அப்போது பழனிசாமியின் தூண்டுதலில் பேரில் அவரது பாதுகாவலர் கிருஷ்ணன் என்னைப்பார்த்து அசிங்கமான வார்த்தைகளால் திட்டி என்னை தாக்கினார்.

மேலும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள என்னுடைய செல்போனை பறித்துக்கொண்டு முகத்திலும், முதுகிலும் குத்தினார். அவருடன் சேர்ந்து அடையாளம் தெரியாத நபரும் என்னை தாக்கி ஊமை காயங்களை ஏற்படுத்தினார்கள்.

பின்னர் பஸ்ஸில் இருந்து என்னை கீழே இறக்கி, பழனிசாமி சொன்னதன் பேரில் கிருஷ்ணன் என் சட்டையை பிடித்து இழுத்து விமான நிலைய வெளிப்பாடு பகுதிக்கு தரதரவென்று இழுத்து வந்தார்.

case against edappadi on madurai incident is mkstalin stunt

6 பேர் மீது வழக்கு

அப்போது அங்கு இருந்த சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் மூவரும் என்னை தாக்கி ரத்தகாயத்தை ஏற்படுத்தினார்கள். எனது வலது கைவிரல் ஒடிந்து ரத்த காயம் ஏற்பட்டு நான் அலறியதை தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சகபயணிகள் என்னை அவர்களிடம் இருந்து மீட்டு உயிரை காப்பாற்றினார்கள்.

அப்போது எடப்பாடி பழனிசாமி உட்பட என்னை தாக்கிய அனைவரும் சேர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை அங்கிருந்த செந்தில்குமார் என்பவரும், இரு குழந்தைகளும் நேரில் பார்த்தார்கள்.

case against edappadi on madurai incident is mkstalin stunt

எனவே, என் செல்போன் பறித்து, ரத்தகாயத்தை ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து சென்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து பழங்காநத்தம் பகுதியில் அதிமுக சார்பில் இன்று (மார்ச் 12) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன்பின்னர் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர். பி.உதயகுமார் மற்றும் ராஜன்செல்லப்பா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

case against edappadi on madurai incident is mkstalin stunt

அரசியல் நாகரிகம் தெரியாத ஸ்டாலின்

செல்லூர் ராஜூ பேசுகையில், ”மூன்று மாவட்ட கழக செயலாளர்களும் அவசர அவசியம் கருதி அழைத்துள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் மதுரை வந்தார். விமானநிலையத்தில் இருந்து பேருந்தில் வரும் போது மோசமான கிரிமினல் ஒருவர் அசிங்கமாக மோசமாக பேசினார். அதை பொறுமையாக கேட்டுக்கொண்டு பழனிச்சாமி அமைதியாக வந்தார்.

உள்ளே நடந்த சம்பவம் குறித்து எங்களுக்கே தெரியாது. ஒரு எதிர்க்கட்சித்தலைவரை மக்கள் செல்வாக்கை பெற்றவரை திட்டமிட்டு வழக்கில் சேர்த்து பொய்யான குற்றச்சாட்டை காவல்துறை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர். இரவு நேரத்தில் ஜோடிக்கப்பட்டு எடப்பாடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவம் எங்கேயுமே நடந்ததில்லை.

நாங்கள் எங்குமே இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொண்டதில்லை. முறையற்ற செயல் செய்தவரை கண்டிக்கவில்லை. எடப்பாடி மீது வழக்குப்பதிவு செய்ததில் என்ன நியாயம் உள்ளது?

அரசியல் நாகரீகம் தெரியாத ஸ்டாலின் என்பது இந்த வழக்கால் தெரிய வருகிறது. அமமுக நபர் ஒரு அநாகரீக பேர்வழி. எதிர்க்கட்சித்தலைவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

அதிமுகவினர் தாக்கிய காட்சிகள் குறித்து எங்களுக்கு தெரியாது. எங்கள் எல்லைக்குள் நடந்ததால் கொந்தளிப்போடு பேசுகிறோம். எல்லா மக்களாலும் நேசிக்கப்படும் தலைவர் எடப்பாடி மீது காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு தொடுத்துள்ளனர்.

நாங்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் போது எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோமா? மதுரைக்கே வரமுடியாத நிலையில் இருந்த ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் பாதுகாப்போடு வருகை தந்தார்.

வழக்கை படித்தால் மனமே பதறுகிறது. இந்த அரசாங்கத்தின் காழ்ப்புணர்ச்சி வழக்கால் தெரிகிறது. அதிமுகவினர் மீது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசாங்கம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். நாங்கள் சொன்னதால் அதிமுகவினர் அமைதியாக உள்ளனர்.

வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து அதிமுக வழக்கறிஞர்கள் குழு கவர்னர், உள்துறை செயலாளருக்கு, டிஜிபிக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம். அதிமுகவை அடக்கி ஒடுக்கி விடலாம் என ஸ்டாலின் நினைத்தால் அது பகல்கனவு தான்.” என்றார்.

காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு

தொடர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “குற்றவாளி கொடுத்த புகாரை வைத்து வழக்குப்போடுவதை பார்த்தால் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு போகியுள்ளது என்பது தெரியும். கொதிப்போடு உள்ள தொண்டர்களை நாங்கள் ஆசுவாசப்படுத்தி உள்ளோம்.

புழுவுக்கு கூட கோபம் வரும். ஆனால் புன்னகையோடு எடப்பாடி இந்த சம்பவத்தை கடந்து சென்றார். ஒருதலைப்பட்சமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதியப்பட்டுள்ளது.

எடப்பாடி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுவதால் இந்த அராஜகத்தை அரங்கேற்றி உள்ளனர். தனிநபர் தாக்குதலை எந்தவொரு மனசாட்சி உள்ள நபரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.

குற்ற எண் 199/2023 341, 294 (b ), 323, 392, 506 (1), 109 IPC ஆகிய பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் முன் ஜாமீன் முயற்சிகளில் இறங்கியுள்ளது எடப்பாடி தரப்பு.

கிறிஸ்டோபர் ஜெமா

விமானத்தில் புகைப்பிடித்த பயணி மீது வழக்குப்பதிவு!

பிரதமரை பார்க்க சிறுவனின் சட்டையை கழற்றிய அதிகாரிகள்

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.