திமுகவினர் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய விவகாரத்தில், சென்னை காவல் ஆணையருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக கடந்த ஜனவரி 7ஆம் தேதி தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பங்கேற்று ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து பேசினார்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த சென்னை காவல் ஆணையர் அனுமதி மறுத்து விட்டார். இதை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். ஆனால் ஆளுநருக்கு எதிராக ஆளும் கட்சியான திமுக போராட்டம் நடத்த விதிகளை மீறி அனுமதி அளித்துள்ளார்.
ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு சென்னையில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் போராட்டமும் ஊர்வலமோ நடத்தக்கூடாது என்று போலீசார் தடை விதித்திருந்தனர்.
இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவுக்கு எதிராக மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை மாநகர காவல் ஆணையர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிக்கு எதிராகவும் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் இன்று(ஜனவரி 21) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார்.
இந்த மனுவுக்கு தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.