விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான சனாதன வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்ற மனுவில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 1) அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு சென்னையில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “சனாதன தர்மத்தை நாம் எதிர்க்கக்கூடாது. டெங்கு, மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க மாட்டோம். அதனை ஒழிக்கவே முயற்சி செய்வோம். அதேபோல் தான் சனாதன தர்மமும். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சிறந்தது”என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
உதயநிதியின் இந்த பேச்சுக்கு வட மாநிலங்களில் இருந்து பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனையடுத்து, பல மாநிலங்களில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க உதயநிதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை, இன்று (ஏப்ரல் 1) உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “ஏற்கனவே ஐந்து மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்குகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் குழப்பம் ஏற்படும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அப்போது நீதிபதிகள், “அடிப்படை உரிமைகளை பாதிக்கும் 32-வது பிரிவில் சனாதன தர்மம் மீதான மனுவைத் தாக்கல் செய்திருப்பது ஏற்புடையதல்ல. அதனை திருத்தி மனுத்தாக்கல் செய்ய வேண்டும். 3 வாரத்தின் இந்த மனுவில் மாற்றங்களை செய்து நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்”என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்விக்கு அறிவுறுத்தினர்.
மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…