மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 25) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
மனிதநேயப் பண்பாளர்!
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், “இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேமுதிக நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், திரை வாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்” என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பர்!
நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த். ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன்” என கமல் பாராட்டியுள்ளார்.
எளிய மக்கள் மீது பேரன்பு கொண்ட பண்பாளர்!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர். நேர்மையும் துணிச்சலும் உடைய தலைவராக விளங்கியவர். எளிய மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்த பண்பாளர் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மனதில் ஜொலித்த மனிதநேயர்!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதிவில், ”திரையுலகிலும், பொதுவாழ்விலும் முத்திரைகளை பதித்த சாதனையாளர். மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு ஜொலித்த மனிதநேயர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர். தமிழக மக்களின் அன்பில் நிறைந்திருக்கும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவர்தம் நினைவை, புகழை போற்றி வணங்குகிறோம்!” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரஜினியின் கூலி படத்தில் இணையும் கன்னட மாஸ் ஹீரோ!
72வது பிறந்தநாள் : விஜயகாந்த் சிலையை கண்கலங்க திறந்து வைத்தார் பிரேமலதா