டிசம்பர் 28 ஆம் தேதி காலை 6.10 மணிக்கு மியாட் மருத்துவமனையில் காலமானார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த். அடுத்த கொஞ்ச நேரத்தில் அவரது உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் பின் அங்கே சில சடங்குகளை முடித்த கையோடு கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
‘நேற்று பிற்பகல் 2 மணி முதல் கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் கடும் நெரிசலுக்கு இடையே பல்லாயிரக்கணக்கானோர் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே நேற்று மாலை 4 மணிக்கு, ‘விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29 மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்படும்’ என்று தேமுதிக தலைமை அறிவித்தது.
அங்கே கூட்ட நெரிசலால் இன்று காலை 6 மணி முதல் அவரது உடல் தீவுத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று பிற்பகல் 1 மணியளவில் தீவுத் திடலில் இருந்து கோயம்பேடுக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.
இதற்கிடையே தேமுதிக அலுவலகம் என்பது விஜயகாந்த் குடும்பத்தின் சொந்த இடம். பட்டா இடத்தில் இறந்தவரை அடக்கம் செய்ய முடியுமா என்ற சர்ச்சையும் எழுந்தது.
இதுபற்றி வழக்கறிஞர்கள் சிலரிடம் விசாரித்தபோது, “விஜயகாந்துக்கு முன்பே இதுபோன்ற விவகாரம் விவாதமாக மட்டுமல்லாமல் வழக்காகவும் உயர் நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தை சேர்ந்த பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். ‘ எங்களது கிராமத்தில் மயானம் உள்ளது. ஆனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ்வரி, இறந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று அந்த வழக்கில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பஞ்சாயத்து சட்டத்தின்படி பட்டாநிலத்தை மயானமாகப் பயன்படுத்த முடியாது என்றும், மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். மேலும் பட்டா நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டியெடுத்து, மயானத்தில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான செலவுத்தொகையை ஜெகதீஷ்வரியிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஷ்வரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த அப்பீல் விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜி.ஜெயச்சந்திரன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நடந்தது. இந்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வும் ஏற்கனவே வழங்கிய தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தது.
அதாவது ‘பஞ்சாயத்து சட்ட ரீதியாக மயானம் என ஒதுக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும். பட்டா நிலத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாது என்பதுதான் தீர்ப்பு.
உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பட்டா நிலத்தில் இறந்தவரின் உடலை அடக்கமோ தகனமோ செய்ய முடியாது. ஆனால் பஞ்சாயத்து சட்டத்தில் இன்னொரு பிரிவும் உள்ளது. அதாவது ஒருவரின் உடலை ஓர் பட்டா இடத்தில் அடக்கம் செய்ய முடிவெடுத்தால் அதற்கு சுற்றுப்புற மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதலோடு அங்கே அடக்கம் செய்யலாம்.
ஏற்கனவே 2001 இல் மறைந்த தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனாரின் உடல் காமராஜர் அரங்கத்துக்கு பின்னால் இருக்கும் காங்கிரஸ் டிரஸ்டுக்குரிய இடத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது டிரஸ்டில் இருந்தே சில எதிர்ப்புக் குரல்கள் இருந்தாலும் அப்போதைய காங்கிரஸ் நிர்வாகிகள் மறைந்த வெற்றிவேல் மற்றும் இப்போது பாஜகவில் இருக்கும் கராத்தே தியாராஜன் ஆகியோர் பேச வேண்டிய முறையில் பேசி அந்த எதிர்ப்பை சரிக்கட்டினர். அதன் பின் மூப்பனாரின் உடல் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் டிரஸ்டுக்கு சொந்தமான இடத்தில் தகனம் செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். அதனால் மற்ற நிர்வாக நடைமுறைகள் எளிதாக நடந்தன.
இந்த பின்னணியில் இப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய தேமுதிக சார்பில் சென்னை மாநகராட்சியில் நேற்றே விண்ணப்பிக்கப்பட்டுவிட்டது. அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி மண்டல அலுவலர் நேற்றே கோயம்பேடு தேமுதிக அலுவலகம் சென்றார். நிர்வாகிகள் குடும்பத்தினரோடு ஆலோசித்து விஜயகாந்த் அடக்கம் செய்வதற்கான இடம் பற்றிய அளவீடுகளை மேற்கொண்டார்.
இப்போதைய திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், மறைந்த விஜயகாந்துக்கு அரசு மரியாதை வழங்குவதாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் மாநகராட்சியிடம் இருந்து தேமுதிக அலுவலகத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான நிர்வாக ஒப்புதலும் எளிதாகவே கிடைத்துள்ளது.
மேலும் விஜயகாந்தின் உடலை தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்ய அந்த சுற்று வட்டாரத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவும் வாய்ப்பில்லை. அந்த அலுவலகத்தின் ஒரு பக்கம் மேம்பாலம், இன்னொரு பக்கம் ஆம்னி பஸ் ஸ்டாண்டு என்று பொது இடங்களே இருப்பதால் தனி நபர்களின் எதிர்ப்பு என்பதும் இல்லை.
எனவே விஜயகாந்தின் உடலை தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்வதற்கு சட்ட சிக்கல்கள் இல்லை” என்று விளக்கினார்கள்.
இதற்கிடையே விஜயகாந்தின் ரசிகர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும், “விஜயகாந்தை அடக்கம் செய்ய பொது இடம் வேண்டும்., மெரினாவில் விஜயகாந்தை அடக்கம் செய்ய வேண்டும்’ என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்பதே உண்மை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
டிசம்பர்னு இருந்தா தை மாசம்னு ஒண்ணு இருக்கும்: அப்டேட் குமாரு
விஜய், சூர்யாவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த விஜயகாந்த்