விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் வெற்றி பெற்றது ஏற்படுத்திய தாக்கத்தை விட, அத்தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தோல்வியுற்றதுதான் அதிக தாக்கத்தை அரசியல் விவாதங்களில் ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் 4 ஆயிரத்து 379 வாக்குகள் மட்டுமே குறைந்து தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, “விஜய பிரபாகரன் வீழ்ச்சி அடையவில்லை. வீழ்த்தப்பட்டிருக்கிறார். சூழ்ச்சி செய்து வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் மறு வாக்கு எண்ணிக்கைக்கு புகார் கொடுத்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.
மாணிக் தாகூர் விருதுநகர் தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை தோற்கடித்தார். ஆனால் இம்முறை தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனிடம் வெறும் 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
“மாணிக் தாகூருக்கு இந்த முறை சீட் கிடைத்ததே பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான். அவர் ஏற்கனவே இரு முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றபோதும் அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து வருட காலத்தில் தொகுதியில் மக்களிடமோ, காங்கிரசாரிடமோ, கூட்டணிக் கட்சியான திமுக நிர்வாகிகளிடமோ நெருங்கிப் பழகியதில்லை. மேல் மட்ட அரசியல் மட்டுமே நமக்கு மீண்டும் சீட் வாங்கிக் கொடுக்கும் என்ற காங்கிரஸின் பாரம்பரிய வழக்கப்படி மேல்மட்ட அரசியலையே செய்து வந்தார்.
அதிலும் ராகுல் காந்தியிடம் ஒரு சில விஷயங்களில் பெரும் கோபத்தை சம்பாதித்தார். ஆனபோதும் டெல்லி செல்வாக்கை வைத்து போராடி மீண்டும் சீட் வாங்கினார். ஆனால், காங்கிரஸில் மாணிக் தாகூரை விட வேறு யாருக்காவது சீட் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை வாக்கு எண்ணிக்கை வரை பேச வைத்துவிட்டார்” என்கிறார்கள் லோக்கல் காங்கிரஸார்.
உயர்த்திக் கொடுத்த உதயகுமார்
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் திமுக கட்சி அமைப்பு ரீதியாக திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகள் மதுரை தெற்கு மாசெவான சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் வருகின்றன. அதே தொகுதிகள் அதிமுகவில் மதுரை புறநகர் மேற்கு மாசெவும் முன்னாள் அமைச்சருமான உதயகுமார் வசம் இருக்கின்றன.
இந்தத் தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் மாணிக் தாகூர் 77 ஆயிரத்து 119 ஓட்டுகளும், விஜய பிரபாகரன் 71,664 ஓட்டுகளும் பெற்றனர். அதாவது திருப்பரங்குன்றம் தொகுதியில் மாணிக் தாகூர் ஏறத்தாழ 6 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றார்.
ஆனால் உதயகுமாரின் சொந்தத் தொகுதியான திருமங்கலம் தொகுதியில் கொத்தாக பத்தாயிரம் ஓட்டுகள் லீடிங் எடுத்துவிட்டார் விஜய பிரபாகரன். இத்தொகுதியில் காங்கிரசின் மாணிக் தாகூர் 69 ஆயிரத்து 587 வாக்குகள் பெற்றார். ஆனால் விஜயபிரபாகரனோ 79 ஆயிரத்து 591 வாக்குகள் பெற்றார். இந்த பத்தாயிரம் லீடுதான் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரை சமாளிக்க பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலம் முன்னாள் அமைச்சரான உதயகுமார் தன் சொந்தத் தொகுதியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டார்.
ஆப்பு வைத்த அருப்புக்கோட்டை- காப்பாற்றிய சிவகாசி
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.-தங்கம் தென்னரசு ஆகிய இரு அமைச்சர்கள், இரு மாசெக்கள் விருதுநகர் மாவட்டத்தில் தொகுதியில் இருக்கிறார்கள்.
தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் எல்லைக்குள் சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய தொகுதிகள் வருகின்றன. இவற்றில் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகியவை வருகின்றன.
சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 59,238 வாக்குகளை விஜயபிரபாகரன் வாங்க, அவரை விட மாணிக் தாகூர் சுமார் ஆறாயிரம் வாக்குகள் அதிகமாகி, 65 ஆயிரத்து 52 வாக்குகளைப் பெற்றார்.
ஆனால் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதுவும் தற்போது கே.கே.எஸ்.எஸ்,ஆர். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அருப்புக்கோட்டை தொகுதியில் 61,659 வாக்குகளை விஜயபிரபாகரன் அறுவடை செய்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரோ 12 ஆயிரம் வாக்குகள் பின் தங்கி 49 ஆயிரத்து 381 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
அந்தப் பக்கம் திருமங்கலத்தில் தூக்கிய விஜய பிரபாகரனின் லீடிங், இந்தப் பக்கம் அருப்புக்கோட்டையில் அபாரமாக தூக்கியது. இதன் காரணமாகவே அவர் திமுக கூட்டணியை தண்ணி குடிக்க வைத்திருக்கிறார்.
சிவகாசி, விருதுநகர் ஆகிய தொகுதிகளின் பொறுப்பை மேற்கொண்ட வடக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டையில் இழந்ததை, சிவகாசியில் ஈடுகட்டியிருக்கிறார். சிவகாசி தொகுதியில் விஜயபிரபாகனை விட மாணிக் தாகூர், 14 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். அதேபோல விருதுநகர் தொகுதியில் சுமார் இரண்டாயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளார் மாணிக் தாகூர்.
விஜயபிரபாகரனின் அங்காளி பங்காளி பாசம்!
விஜயகாந்தின் மகன் என்ற அடையாளத்தோடு களமிறங்கிய விஜய பிரபாகரனுக்கு, விஜயகாந்தை போன்றே மக்களோடு பழகிய விதமும் விஜயகாந்தை போன்றே அவர் பேசிய விதமும் பெருமளவு கை கொடுத்தது.
தேர்தல் பிரச்சார காலத்திலேயே மின்னம்பலத்துக்கு பேட்டியளித்த விஜய பிரபாகரன், ‘ஊடகங்கள் எல்லாம் சொல்வது மாதிரி நான் 25 எம்,எல்,ஏ.க்கள், 100 கவுன்சிலர்கள், கேப்டன் இருக்கும்போது என கட்சியோட பொற்காலத்துல அரசியலுக்கு வரல, எல்லாமே இழந்து ஸ்டேடிடிக்ஸ்படி கட்சி ஒண்ணுமில்லாத காலத்துல போராட வந்திருக்கேன்’ என்று கூறினார். இதைத்தான் அவர் பிரச்சாரக் களத்திலும் பெரும்பாலும் பேசினார்.
மேலும், விஜயகாந்தின் தந்தை அதாவது எனது தாத்தாவுக்கு பூர்வீகம் விருதுநகர்தான். மீண்டும் நான் விருதுநகருக்கு வந்திருப்பதை தெய்வ செயலாகவே பார்க்கிறேன் என்று சமுதாய சென்டிமென்ட் டோடு பேசினார்.
இந்த பேச்சும், விஜயகாந்தின் சமுதாய பலமும் பொதுவானவர்களின் வாக்குகளும்தான் விஜய பிரபாகரனை வெற்றியின் விளிம்பு வரை கொண்டுவந்து விட்டிருக்கின்றன.
செல்லாத தபால் ஓட்டுகள் கொதிக்கும் அதிமுக-தேமுதிக
வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே ஜூன் 4 ஆம் தேதி பகலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘ரிசல்ட் அறிவிக்கப்படுறதுக்கு தாமதம் ஆகுது. உள்ள என்ன நடக்குதுனு தெரியலை. ஆனா ஏதோ நடக்கு. எதுவாக இருந்தாலும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தான் முடிவு செய்வோம்” என்றார்.
மேலும் தபால் ஓட்டுகள் மொத்தம் 10 ஆயிரத்து 214 பதிவானது. அதில் மாணிக் தாகூருக்கு 2,380 வாக்குகள் விழுந்தன. விஜய பிரபாகரனுக்கு 2,634 வாக்குகள் அதாவது திமுக கூட்டணியை விட சுமார் 300 வாக்குகள் அதிகமாக விழுந்தன. தபால் ஓட்டுகளில் செல்லாத ஓட்டுகள் 1,820 என்று அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியவில்லை என்கிறார்கள் அதிமுகவினர்.
சவுத்-தில் சாதி ஆதிக்கம்!
விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டத் தொகுதிகளில் பணம், தேர்தல் வேலை இதையெல்லாம் தாண்டி இந்த முறை சாதி முக்கியப் பங்காற்றியிருப்பதை முதல்வரிடமே திமுகவின் தென் மாவட்ட மாசெக்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது மேல்தட்டு சாதியினர் இந்த முறை திமுக, அதிமுகவுக்கு வேட்பாளர் சார்ந்து ஆதரிப்பதை விட கணிசமான சதவிகிதத்தில் பாஜகவை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமுதாயத்தினர் திமுகவை நோக்கி வாக்களித்திருக்கிறார்கள். இது தொடர்பான தென் மாவட்ட நிலவரத்தை முதல்வரிடம் புள்ளி விவரத்தோடு கொடுத்திருக்கிறார்கள் திமுக மாசெ.க்கள். அந்தத் தொகுதிகளில் விருதுநகரும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க திமுகவும், தேர்தல் ஆணைய ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிமுக, தேமுதிகவும் தயாராகின்றன. எனினும் விருதுகரில் விஜய பிரபாகரனுக்கு கிடைத்தது கௌரவமான தோல்விதான்!
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெற்றி கொண்டாட்டம் முக்கியம் தான், ஆனால்… நிர்வாகிகளுக்கு கார்கே அட்வைஸ்!