ஒருவரது கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக கருதப்படகூடாது என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.
சிஆர்பிஃஎப், சிஐஎஸ்ஃஎப், அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட ஆயுதப்படைகளை உள்ளடக்கிய சிஏபிஃஎப் ( Central Armed Police Force) பணிபுரிவதற்கான தேர்வு அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது .
அதில் கணினித் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பானது இந்தி பேசும் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே சாதகமானதாக இருக்கிறது எனவும் பிற மாநில மொழிகளிலும் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனை அடுத்து சிஏபிஎஃப் தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழியுடன் இணைந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முயற்சியால், உள்ளூர் இளைஞர்கள் சிஏபிஎஃப் தேர்வில் பங்கேற்பதற்கும் பிராந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தி மற்றும் ஆங்கில மொழிகளுடன் கூடுதலாக 13 மாநில மொழிகளில் ஜனவரி 1 2024 முதல் தேர்வு நடத்தப்படும். இந்த முடிவின் விளைவுகளாக லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தங்கள் தாய்மொழி, பிராந்திய மொழியில் தேர்வை எழுத முடிவதோடு, அவர்களுக்கான தேர்வு எழுதும் வாய்ப்பும் அதிகரிக்கும்” என்றது.
இந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி இன்று(ஏப்ரல் 15) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும், ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவதில் மொழி ஒரு தடையாகக் கருதப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான எங்களின் பல்வேறு முயற்சிகளில் இது ஒரு பகுதி என்றும் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“அண்ணாமலை மட்டும்தான் நாட்டுக்காக உழைக்க பிறந்தவரா”: கே.பி.முனுசாமி