சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சேரி மொழி பேசத் தெரியாது” என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் விசிக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 25) செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “என்னுடைய ட்விட்டர் பதிவில் நான் தெளிவாக தான் தெரிவித்திருந்தேன். அதுமட்டுமில்லாமல் அந்த பதிவில் நான் திமுகவை தானே குறிப்பிட்டிருந்தேன். திடீரென்று ஏன் காங்கிரஸ்காரர்கள் பொங்கி வருகிறார்கள். திமுகவின் செய்தி தொடர்பாளர் காங்கிரஸா? அல்லது காங்கிரஸ் திமுகவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை.
சேரி என்ற வார்த்தையை நான் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. பிறகு எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசு ஆவணங்களிலும் சேரி என்று இருக்கிறது. வேளச்சேரி, செம்மஞ்சேரி இன்று இருக்கிறது. அதற்கெல்லாம் என்ன அர்த்தம். நீங்கள் எல்லாம் தமிழ் தெரிந்தவர்கள் தானே. சேரிக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு விளக்கம் கொடுங்கள்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர் சேரி என்றால் என்ன என்று விளக்கம் அளிக்க, தொடர்ந்து பேசிய குஷ்பு, “அந்த பகுதியில் வாழ்கின்ற மக்கள் நமக்கு சமமாக உட்கார அவர்களுக்கு தகுதி கிடையாதா? நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. என்னை பொறுத்தவரை எந்த பகுதியில் வாழ்கின்ற மக்களாக இருந்தாலும் நமக்கு சமமாக உட்கார்ந்து பேசுவதற்கும், வாழ்வதற்கும் உரிமை இருக்கு. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து வந்த மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு நான் விரும்பவில்லை. அந்த அர்த்தத்தில் என்னால் பேசவும் முடியாது.
தமிழ்நாட்டிற்கு வந்த இத்தனை வருடத்தில், நான் வேலை செய்த அனைத்து இடங்களிலும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை. எனக்கு தெரிந்த மொழியில் நான் பேசுவேன்.
நான் பதிவு செய்த ட்வீட்டையும் என்னால் நீக்க முடியாது. பயந்து பின் வாங்க கூடிய ஆள் நான் கிடையாது.
த்ரிஷா விஷயத்தில் மன்சூர் அலிகான் தெரியாமல் பேசிவிட்டதாக மன்னிப்பு கேட்டிருந்தால் சரியாகி இருக்கும். ஒன்றுமே இல்லாத ஒரு விஷயம் இவ்வளவு நாள் நீடித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ராஜஸ்தான் தேர்தல்: வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு?
மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன்… வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் யார்?