ஒவ்வொரு பட்ஜெட்டிலும், ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட முடியாது என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு என எந்த சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள, பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்த நிதிஷ் குமார் ஆளும் பிகார் மாநிலத்துக்கும், சந்திரபாபு நாயுடு ஆளும் ஆந்திர பிரதேசத்துக்கும் மட்டும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இன்று (ஜூலை 24) மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
“ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. ஒரு மாநிலத்தின் பெயர் குறிப்பிடப்படாததால், அவர்கள் மத்திய அரசின் திட்டங்களின் பலனைப் பெறவில்லை என்று அர்த்தம் இல்லை.
உதாரணமாக, மகாராஷ்டிராவில் துறைமுகம் அமைக்க ஜூன் மாதம் அமைச்சரவை முடிவு எடுத்தது. அதற்காக ரூ.76,000 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த மாநிலத்தின் பெயரை சொல்லாததால் மகாராஷ்டிரா புறக்கணிக்கப்பட்டது என்று அர்த்தமா?
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றால் அந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறுவது அபத்தமானது.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக் கால நிதியமைச்சர்கள் தங்கள் பட்ஜெட் உரையின் போது அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் சொன்னார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் 5 முக்கியப் பிரச்சினைகள்!
தனிமைப்பட்டுப் போவீர்கள் : மோடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!