’குறுகிய இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை புதைக்க முடியாது’ : ஹத்ராஸ் சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி!

அரசியல்

”தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்” என்று ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக்கோரி அவரது மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று (ஜூலை 7) காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் சுப்பு தனது வாதத்தில், ”ஆம்ஸ்ட்ராங் பெயரில் உள்ள நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அதே போல ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யவும் அரசு அனுமதிக்க வேண்டும். பெரம்பூர் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அப்பகுதிவாசிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்” என வாதிட்டார்.

3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன!

அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், “தேமுதிக அலுவலகம் 27,000 சதுர அடி கொண்ட பரந்த இடம். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் அமைந்துள்ள பகுதியில் எப்படி மணி மண்டபம் கட்ட முடியும்?

ஆம்ஸ்ட்ராங் உடலை புதைக்க 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 2000 சதுர அடியில் நிலம் ஒதுக்க அரசு தயாராக உள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம்” என்று வாதிட்டார்.

விஜயகாந்த் நினைவிடத்துடன் ஒப்பிட முடியாது!

அதனைதொடர்ந்து நீதிபதி சுப்பராயன், “அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் வேண்டுமே? குடியிருப்புப் பகுதியில் மணிமண்டபம் கட்ட எப்படி அனுமதிக்க முடியும்? ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது? குறுகிய சாலையில் ஆயிரக்கணக்கானோர் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.

ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா? போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. குறைந்தது 40 அடி சாலையுள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டினால் தான் மக்களுக்கு சிரமம் இருக்காது. விஜயகாந்த் நினைவிடம் பெரிய அளவில் உள்ளது. அதனுடன் இதை ஒப்பிட முடியாது.

தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்” என்று நீதிபதி பவானி சுப்பராயன் தெரிவித்தார்.

வழக்கு மதியம் 12 மணிக்கு ஒத்திவைப்பு!

தொடர்ந்து அவர், ”ஆர்ம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை நீதிமன்றத்தில் பல முறை பார்த்துள்ளேன். நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். வேறு நல்ல இடத்தை கூறுங்கள். பேசிவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன். வழக்கை 10.30 மணிக்கு விசாரிக்கிறேன்” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு, இதுகுறித்து 12 மணிக்கு பதிலளிக்க அனுமதிக்குமாறு  முறையிட்டது. அதனை ஏற்று வழக்கு மீதான தீர்ப்பை மதியம் 12 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சுடுகாட்டில் அடக்கமா? : ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு

”மதுவிலக்கு அமலானால் கள்ளச்சாராயம் அதிகமாகும்” : கமல்ஹாசன்

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *