திமுகவினரின் சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில், திமுக அனுப்பிய நோட்டீசுக்கு இன்று (ஏப்ரல் 21)பதிலளித்திருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதற்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியிருந்தார்.
அந்த நோட்டீஸில், அண்ணாமலை தரப்பில், திமுகவினர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும், ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இன்னும் 48 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கோராவிட்டால், வழக்குத் தொடரப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அண்ணாமலை தரப்பின் அடுத்த நடவடிக்கை என்ன என்று எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், அவர் தரப்பு வழக்கறிஞர் பால் கனராஜ், ஆர்.எஸ் பாரதியின் வக்கீல் நோட்டீஸ்க்கு இன்று பதில் அளித்திருக்கிறார்.
அதில்,”தி.மு.க குறித்து அண்ணாமலையின் கருத்துகள், குற்றச்சாடுகள் உண்மையே. கடந்த 14-ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பு, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அவமானப்படுத்துவதை நோக்கமாக கொண்டது அல்ல.
தி.மு.க குறித்து அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பொதுத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.
எனவே தி.மு.க-வினர் செய்திருக்கும் ஊழல்களை அடிப்படை ஆதாரங்களுடன் வெளிகொண்டுவந்திருக்கிறார்.

எனவே மன்னிப்பு கேட்கப்போவதில்லை. ரூ 500 கோடி இழப்பீடு தரவேண்டும் எனக் கேட்கப்பட்டிருக்கிறது.ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என எந்தச் சட்டத்திலும் இல்லை.
மேலும் இந்த வழக்கைச் சட்ட ரீதியாகச் சந்திக்கவிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து டெல்லியில் இருக்கும் சிபிஐ தலைமை அலுவலகத்தில் எழுத்துபூர்வமாகப் புகாரளிக்க விருக்கிறோம். மன்னிப்பு கேட்க முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
12 மணி நேர வேலை மசோதா: தங்கம் தென்னரசு விளக்கம்!
எம்.பில். மருத்துவ உளவியல் படிப்பு: விசிகவின் முக்கிய கோரிக்கை!