தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பின் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களை இன்று(மே31) சந்தித்த அவர், “சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்குவோம் என்று சொல்லுவது ஏற்புடையதல்ல. குறை உள்ளது என தெரிந்தால் அரசு நிச்சயம் அதை சரி செய்யும்.
இது தொடர்பாக நேற்று நம் துறைச் செயலாளர் மருத்துவத் துறை அலுவலர்களை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார். முதல்வர் இன்று இரவு சென்னை வருகிறார். நானும் நம்முடைய செயலாளரும் நாளை முதல்வரை சந்தித்து ஆலோசிக்க இருக்கிறோம். இதற்கிடையே ஒன்றிய அமைச்சர்களை சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறோம். அவர்கள் நேரம் ஒதுக்கியவுடன் உடனடியாக டெல்லி சென்று நம்முடைய மருத்துவத் தேவை தொடர்பாக விளக்கிக் கூற இருக்கிறோம்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள மிகச்சிறந்த மருத்துவகல்லூரிகளில் ஒன்று. தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை திறந்து வைத்திருக்கிறோம். நேற்று முன் தினம் கூட திருப்பூரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தோம்.
இந்நிலையில், நாமக்கல் , நாகப்பட்டினம்,ஊட்டி, இராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனைகள் மிக விரைவில் திறக்கப்பட உள்ளன.
இரண்டு ஆண்டுகளில் 25 புதிய மாவட்டஅரசு தலைமை மருத்துவமனைகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் , 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
கேரளாவில் வசூல் சாதனை உறுதி: ’லியோ’ பட உரிமையை கைப்பற்றிய ஃபெயோக்?