வாய்த்துடுக்காகவும், ஆணவமாகவும் பேசிப் பேசித்தான் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஆணவத்திற்காகவே தமிழ்நாட்டு மக்கள் உங்களை தோற்கடித்துக்கொண்டே இருப்பார்கள் என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு கள ஆய்விற்காக வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளான இன்று (நவம்பர் 10) ரூ.77 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 321 கோடி ரூபாய் மதிப்பில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 98 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 35 திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். 57,556 பயனாளிகளுக்கு 417 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, விழா நடைபெறும் அரங்கில் வெம்பக்கோட்டை அகழ்வராய்ச்சி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.
இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்றே நினைக்கிறேன்!
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், “விருதுநகர் என்று சொன்னவுடனே நமது நினைவிற்கு வருவது சங்கரலிங்கனார். தமிழ்நாடு என்று பெயர் வருவதற்கு இவர் செய்த தியாகமும் காரணம். பெருந்தலைவர் காமராஜரை நமக்கு அளித்த மண் விருதுநகர். உடல்நிலை சரியில்லை என்ற போதும், எனது திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தினார். என்னால் எப்போதும் மறக்க முடியாது.
இந்தியா டுடே சக்தி வாய்ந்த டாப் 10 தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்கள். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமையா புகழா என்றால் இல்லை. இந்த பெருமையையும் புகழையும் வழங்கியது தமிழ்நாட்டு மக்களான நீங்கள் தான். உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் இந்த ஸ்டாலினின் பலம்.
தமிழ்நாட்டை உயர்த்த நான் என்னுடைய சக்தியை மீறியும் உழைப்பேன் போராடுவேன். இந்த உழைப்பின் பயன்தான் எல்லா புள்ளி விவரங்களிலும் வெற்றிகரமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த புள்ளி விவரங்களால் நான் திருப்தி அடையவில்லை. நமக்கு பின்னால் மக்களுக்கு சேவை செய்ய நிறைய பேர் வருகிறார்கள். அதனால் இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்றே நினைக்கிறேன்.
புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி
மக்கள் நலத் திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கலைஞர் பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதியை நான் ஒதுக்கி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி உளறி இருக்கிறார்.
அதை படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஒருவர் பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று வேடிக்கையாக சொல்வார்கள். எனவே இதை மாற்றி பொய் சொல்லலாம் ஆனால் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது என்று தான் இப்பொழுது சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
எதை பயனில்லாத திட்டம்னு சொல்றீங்க பழனிசாமி? வாய்த்துடுக்காகவும், ஆணவமாகவும் பேசிப் பேசித்தான் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஆணவத்திற்காகவே தமிழ்நாட்டு மக்கள் உங்களை தோற்கடித்துக்கொண்டே இருப்பார்கள்.
தமிழினத்திற்காக 80 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த கலைஞரின் பெயரை மக்கள் நலத் திட்டங்களுக்கு வைக்காமல் வேறு யார் பெயரை வைப்பது? பதவி சுகத்திற்காக கரப்பான்பூச்சி மாதிரி ஊர்ந்து போனீங்களே.. உங்கள் பெயரை வைக்கமுடியுமா?” என்று ஸ்டாலின் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தலைமுறைகள் தாண்டி தொடர்ந்த முகம் – டெல்லி கணேஷ்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு : ஸ்டாலின் இரங்கல்!