மத்தியப் பிரதேசத்தில் எதிர்பாராததை எதிர்பார்க்கலாமா? காங்கிரஸ் வெல்லப்போகும் தொகுதிகள் எத்தனை?

Published On:

| By vivekanandhan

ஹிந்தி பெல்டில் உத்திரப் பிரதேசம் மற்றும் பீகாருக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும். பரப்பளவில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மாநிலம் ஆகும். மத்தியப் பிரதேசத்தில் 29 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. பாஜக மிக வலுவாக உள்ள மாநிலமாகவும் மத்தியப் பிரதேசம் பார்க்கப்படுகிறது.

20 ஆண்டுகளாக தொடர் வெற்றி

கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் அனைத்திலும் பாஜகவே பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இடையில் 2018 சட்டமன்றத் தேர்தலில் மட்டும் காங்கிரஸ் சிறிய எண்ணிக்கையில் 5 தொகுதிகள் மட்டுமே பாஜகவை விட அதிகம் பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த ஆட்சியும் குறுகிய காலம் மட்டுமே நீடித்தது. கொரோனா ஊரடங்கின் போது 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-கள் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் காங்கிரசிலிருந்து விலகியதால் பாஜக ஆட்சியைப் பிடித்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 29 மக்களவைத் தொகுதிகளில் 28 தொகுதிகளை பாஜகவே வென்றதுடன் 58% சதவீத வாக்குகளையும் கைப்பற்றியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கமல் நாத்தின் மகன் நகுல் நாத் வெற்றி பெற்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் 27 தொகுதிகளை பாஜகவே கைப்பற்றி இருந்தது.

பாஜகவிற்கு கவலையளிக்கும் விவகாரம் 

                                                                         

இந்த முறை மத்தியப் பிரதேசத்தின் அனைத்து தொகுதிகளையும் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக களத்தில் இறங்கியது. ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் 4% சதவீதத்திற்கு மேல் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது பாஜகவிற்கு கவலையளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்களின் வாக்கு சதவீதம் 4.4% குறைந்திருப்பதை பாஜக கவலையுடன் பார்ப்பதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு மாதம் 1250 ரூபாய் உதவித் தொகை அளித்த திட்டம் பாஜகவிற்கு 2023 சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் கைகொடுத்ததாக சொல்லப்பட்டது. 2023 சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்ததற்கும் பெண்களின் வாக்குகள் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. எனவே பாஜகவிற்கு பலமாக பார்க்கப்பட்ட பெண்களின் வாக்குகள் குறைந்திருப்பது பாஜகவிற்கு சில இடங்களில் பின்னடைவாக அமையும் என்று அக்கட்சி மேலிடம் கருதுகிறது.

பெரும் எண்ணிக்கையில் பாஜகவில் இணைந்த காங்கிரசார்

காங்கிரசைப் பொறுத்தவரை கட்சியிலிருந்து விலகி ஏராளமானோர் பாஜகவிற்கு சென்றிருப்பதால் பல இடங்களில் தடுமாற்றத்தைக் கண்டிருக்கிறது. 5 லட்சத்திற்கும் அதிகமானோர் காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்திருப்பதாக பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள். ஒரு முன்னாள் மத்திய அமைச்சர், நான்கு முன்னாள் எம்.பிக்கள், 15 முன்னாள் எம்.எல்.ஏகள் என ஏராளமானோர் காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் நிர்வாகிகளை தொடர்ச்சியாக கட்சியில் இணைத்து வருவது பாஜகவிற்குள்ளேயே சில சலசலப்புகளை உருவாக்கியுள்ளதாக மத்தியப் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். நீண்ட காலமாக பாஜகவில் இருக்கும் நிர்வாகிகளின் வாய்ப்பை புதிதாக கட்சியில் இணைபவர்கள் பறிப்பதாக சர்ச்சை பாஜகவிற்குள் உருவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

நோட்டாவிற்கு வாக்கு கேட்ட காங்கிரஸ்

இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த அக்‌ஷய் காந்தி பாம் பாஜகவில் இணைவதற்காக போட்டியிலிருந்து விலகியது காங்கிரசின் பலவீனத்திற்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. இந்தூரில் பாஜகவிற்கு பாடம் கற்பிக்க நோட்டாவிற்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் பிரச்சாரம் செய்திருக்கிறது. ஆனாலும் அத்தொகுதியில் 61% வாக்குகள் பதிவாகியுள்ளது. எனவே நோட்டாவில் எத்தனை வாக்குகள் விழும் என்பது இத்தொகுதியின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

காங்கிரசின் பாசிட்டிவ்

காங்கிரஸ் தனது பாசிட்டிவாக பார்ப்பது என்னவென்றால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 34.5% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த காங்கிரசின் வாக்கு சதவீதம் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலில் 40.5% சதவீதமாக அதிகரித்தது. அதேசமயம் 2019 இல் 58% சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் 48.5% சதவீதமாக 2023 சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது. இதைத்தான் காங்கிரஸ் முக்கியமானதாகப் பார்க்கிறது.

பழங்குடி மக்கள் அதிகமுள்ள தொகுதிகளை குறிவைக்கும் காங்கிரஸ்

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் மிக முக்கியமானதாக இருக்கிறது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 21.1% சதவீதம் மக்கள் பழங்குடி மக்கள் ஆவர். ஒன்றரை கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்கள் அங்கு உள்ளனர்.

பழங்குடி மக்கள் அதிகமாக உள்ள தொகுதிகளையே காங்கிரஸ் தனது நம்பிக்கையாகப் பார்க்கிறது. மொத்தமாக பழங்குடிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளில் 22 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வென்றிருக்கிறது. இதற்கு முந்தைய 2018 சட்டமன்றத் தேர்தலில் 31 பழங்குடி சட்டமன்றத் தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருந்தது. இதன் காரணமாக பழங்குடி மக்கள் அதிகமாக உள்ள 6 நாடாளுமன்றத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானதாக மாறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை பாஜகவை விட அதிகமாக காங்கிரஸ் கட்சியால்  வெற்றி பெற முடியாது என சொல்லப்படும் நிலையில், அங்கு பாஜக இழக்கிற ஒவ்வொரு தொகுதியுமே காங்கிரசுக்கு கூடுதல் பலம் தான்.

காங்கிரசுக்கு சாதகமான குவாலியர்-சம்பல் பிராந்தியத்தின் 3 தொகுதிகள்

குறிப்பாக குவாலியர் – சம்பல் பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதிகள் ஓரளவுக்கு காங்கிரசுக்கு சாதகமான பகுதிகளாகப் பார்க்கப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளில் 13 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது மத்தியப் பிரதேசத்தில் மொத்தமாக 6 நாட்களில் 4 நாட்கள் இந்த பிராந்தியத்தில் தான் பயணித்தார்.

இந்த பிராந்தியத்தில் உள்ள மொரேனா, குவாலியர், பிந்த் ஆகிய 3 தொகுதிகளில் கடும் போட்டியை பாஜகவிற்கு காங்கிரஸ் கொடுத்திருக்கிறது. இப்பகுதியில் பாஜக 2 தொகுதிகளை இழந்தாலோ அல்லது மூன்றையுமே இழந்தாலுமே கூட பெரிய ஆச்சரியமில்லை என்கிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் விகாஷ் தீக்சித்.

பாஜகவிற்குள் நடக்கும் உட்கட்சி சிக்கல்களும், வேட்பாளர்களை களமிறக்கியதில் காங்கிரஸ் போட்ட சாதி ரீதியான கணக்குகளும் காங்கிரசுக்கு சாதகமான சில சூழல்களை இந்த பிராந்தியத்தில் உருவாக்கியுள்ளது. ஆனால் இங்கு குறிப்பிட்ட மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கு பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரசிலிருந்து வெளியேறியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது காங்கிரசுக்கு சவாலைக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.

காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள 2 தொகுதிகள்

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமாக 6 முதல் 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு வலிமையான போட்டியைக் கொடுத்திருப்பதாக மத்தியப் பிரதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சிந்த்வாரா மற்றும் மண்ட்லா ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு காங்கிரசுக்கே அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சிந்த்வாரா தொகுதியைப் பொறுத்தவரை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கமல் நாத்தின் மகன் நகுல் நாத் களமிறக்கப்பட்டார். கமல்நாத், அவரது மனைவி, மருமகள் என மொத்த குடும்பத்தினரும் தொகுதி முழுதும் கடுமையான பிரச்சாரம் செய்திருக்கின்றனர். சிந்த்வாரா தொகுதியானது 1980லிருந்து தற்போது வரை கமல்நாத் குடும்பத்தினரின் கையிலேயே உள்ளது. இடையில் 1998 ஆம் ஆண்டு ஒரு முறை மட்டும் பாஜக வென்றிருக்கிறது. மேலும் தொகுதியில் 45% பழங்குடி மக்கள் இருப்பதும் காங்கிரசுக்கு பலமாக மாறியது. எனவே இத்தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

கமல் நாத், நகுல் நாத் பிரச்சாரம்

அடுத்ததாக மண்ட்லா தொகுதியில் பாஜக சார்பாக இத்தொகுதியில் 6 முறை எம்.பியாக இருந்த ஃபக்கன் சிங் குலாஸ்தே களமிறக்கப்பட்டுள்ளார். ஆனால் 2023 சட்டமன்றத் தேர்தலில் மண்ட்லா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் குலாஸ்தே. மேலும் இத்தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகளை காங்கிரசே கைப்பற்றியது. எனவே இத்தொகுதியும் காங்கிரசுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

களமிறங்கிய திக்விஜய் சிங்

இவை தவிர்த்து பாஜகவிற்கு சவாலாக உள்ள மற்றொரு தொகுதியாக பார்க்கப்படுவது அவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜ்கர் தொகுதியாகும். இது ஆர்.எஸ்.எஸ் வலுவாக உள்ள தொகுதியாகும். ஆனால் இந்த முறை அங்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திக் விஜய் சிங் களமிறக்கப்பட்டுள்ளார். இது அவரது சொந்த தொகுதியாகும். 1991 ஆம் ஆண்டு வரை அவர் இத்தொகுதியில் தான் போட்டியிட்டார். ராஜ்கர் தொகுதியில் திக் விஜய் சிங்கை எதிர்கொள்ள லோக்கல் பாஜக தலைவர்கள் அங்கு நடக்கும் போட்டியை திக் விஜய் சிங்கிற்கும், கடவுள் ராமருக்கும் இடையேயான போட்டி என்று சித்தரித்தே பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஆனாலும் இவற்றைத் தாண்டி திக் விஜய் சிங் செய்த பிரச்சாரம் பாஜகவிற்கு சவாலைக் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

காங்கிரசின் நம்பிக்கை; ஊடகவியலாளர் சொல்லும் தகவல்

தேர்தல் பிரச்சாரம் துவங்கும்போது காங்கிரஸ் மூன்று அல்லது நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றால் நல்லது என்று நம்பியது. ஆனால் அதற்குப் பிறகு களத்தில் நிகழ்ந்திருந்த மாற்றங்களைப் பார்த்த பிறகு, 8 சீட்டுகளை காங்கிரஸ் எதிர்பார்த்திருப்பதாக பத்திரிக்கையாளர் ராகேஷ் தீக்சித் தெரிவித்துள்ளார். எனவே அந்த  8 தொகுதிகளைக் கைப்பற்றுவது பாஜகவிற்கு அத்தனை எளிதாக இருக்காது என்பதே மத்தியப் பிரதேச கள நிலவரமாக இருக்கிறது.

ராகேஷ் தீக்சித் கூறியிருப்பதைப் போல காங்கிரஸ் எதிர்பார்ப்பு நிறைவேறும் பட்சத்தில் மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகள் அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை பாஜக இழக்கும்பட்சத்தில் அது பாஜகவிற்கு தேசிய அளவில் பின்னடைவாகவே அமையும்.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கெஜ்ரிவால் பிரச்சாரம் கைகொடுத்ததா? டெல்லி மக்களின் மனநிலை என்ன?

மகாராஷ்டிரா: உள்ளே, வெளியே… பாஜகவுக்கு எதிரான பல்முனைத் தாக்குதல்!

யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel