முரளி சண்முகவேலன்
-தமிழில் ஸ்னேகா
நன்றி – http://www.dailyo.in
கட்டுரையாளர் – முரளி ஷண்முகவேலன் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தொலைதொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
கட்டுரை – http://www.dailyo.in/politics/jallikattu-protests-peta-shouldnt-colour-our-views/story/1/15200.html
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கும் விலங்கு நேசர்களுக்கும் இடையே உருவாகியிருக்கும் மோதல் எளிதில் அடங்குவதாக தெரியவில்லை.
அமெரிக்காவை தாயகமாக கொண்ட பீட்டா, இந்திய விலங்கு நல ஆணையம், சர்வதேச ஹ்யூமன் சொசைட்டி, பீப்பிள் ஃபார் அனிமல்ஸ், ப்ளூ கிராஸ், நந்திதா கிருஷ்ணன் போன்ற அரசு சாரா அமைப்பின் ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவளிக்கின்றனர். மறுபுறம், தமிழர்கள்,பல நூற்றாண்டுகள் பழமையான தங்கள் மரபை காக்க உணர்ச்சிவசமாக போராடுகிறார்கள். பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் பெயரால் நடக்கும் இந்த காட்டுமிராண்டித் தனமான விளையாட்டை நாம் அனுமதிக்கலாமா? என கேள்வி எழுப்பிய ஊடகங்களினால், சூழல் மேலும் இறுக்கமானது.
விலங்கு நல ஆர்வலரும், பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் தலைவருமான மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் அதி அற்புத கருத்தாக, “ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரத்தின் அங்கம், பாஜக அதற்கு எதிராக இருக்கிறது. அதை தடை செய்ய வேண்டும் எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது” இதை தெரிவித்தார்.
இந்த சுழலுக்கு தமிழர்கள் வழக்கம்போல் உணர்ச்சிமயமாய் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்வதின் மூலம் நாட்டுமாடுகளை அழிக்க சதி செய்கின்றனர் என்ற வாதம் ஜல்லிக்கட்டு தடையோடு இணைத்து பேசப்பட்டது. ( தனிப்பட்ட முறையில்,ஜல்லிக்கட்டிற்கும் நாட்டு மாடுகளை காப்பதற்கும் இருக்கும் தொடர்பை இதுவரை நான் எங்கும் தீர்க்கமாக கேட்கவில்லை).
திரை நட்சத்திரங்கள் கலாச்சாரச் காவலர்களாக மாறியது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் நிலையை மேலும் மோசமாக்கியது. சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்களாலும் இளைஞர்களாலும் நடத்தப்பட்ட போராட்டத்தில்,யாரும் கோரிக்கை வைக்காத போதும் நடிகர்கள், உரையாற்றவும் செய்தார்கள். இப்படியான போராட்டங்கள் ஊடக நிறுவனங்களுக்கு தீனி போடும் அதே நேரத்தில் – கலாச்சாரத்தின் பெயரில் தமிழர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ள அனுமதிக்கப்படலாமா எனும் கேள்வியும் எழுகிறது.
ஆனால்,சில கொடூரங்கள் தவிர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டை தொடரக் கூடாதா? அல்லது ஜல்லிக்கட்டு இயல்பிலேயே விலங்குகளை வன்முறைக்கு உட்படுத்துகிறதா? – என்பவை தான் இங்கு கேள்வியாக இருக்க வேண்டும். ஏனெனில், பீட்டாவின் ஆதரவோடு விலங்கு நல ஆணையம் சமர்ப்பித்திருக்கும் வீடியோக்களில் மாடுகளின் உரிமையாளர்கள் அவற்றை துன்புறுத்துவதைக் காண முடிகிறது. இம்மாதிரியான செயல்கள் நிச்சயமாக தடை செய்யப்பட வேண்டும். இச்செயல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு ஜல்லிக்கட்டு எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பார்ப்பது அவசியமானது.
இந்த மொத்த விவாதத்தின் ஆச்சரியமான கோணம், விலங்குகளுக்கு நேரும் வன்முறை குறித்த அரசியல் பார்வை. இப்பூமியில் தொடர்ந்து நிலைத்திருக்கும் மனித வன்முறைக்கு அவனது நாகரீகமே முதல் சான்று. நாகரீகமும் வன்முறையும் எதிரெதிரே ஆனவை அல்ல. ஜனநாயக அரசியல் முறை, தனியார் உடைமையின் பரிவர்த்தனைகள் , புது தொழில்நுட்பங்களின் அறிமுகங்கள் ஆகிய பலவற்றில், நாகரீகமும் வன்முறையும் பின்னி பிணைந்திருக்கின்றன.
மனிதர்கள் தங்களின் உணவு சங்கிலியின் உயரத்திலேயே இருக்க வேண்டுமானால், பிற உயிரினங்களை வன்முறைக்கு உட்படுத்துவது தவிர்க்க முடியாதது. விலங்குகள் மீது வன்முறை செலுத்துதல் என்பது முற்றிலும் உணர்வு சார்ந்த ஒன்று. இந்த “உன்னத எண்ணத்திற்கு” என எந்த வரையறையும் இல்லை; மேலும் இது காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருக்கிறது.
பீட்டாவின் நிறுவனர் இங்க்ரிட் ந்யூகர்க், “ மனிதர்கள் உட்பட அத்தனை உயிரினங்களும் சமமானவை” என நம்புகிறார், “மொத்த விலங்கு விடுதலையை” இலக்காக கொண்டிருக்கிறார். இது மிகச் சிறப்பான எண்ணம் தான். ஆனால், நம் நாகரீகம் இதற்கு வழி வகை செய்யவில்லை.
விலங்குகளுக்கு கருத்தடை செய்வதை தீவிரமாக வலியுறுத்துகிறது இந்த அமைப்பு. “ தெரு விலங்குகள் உட்பட, பூனைகள் நாய்கள் என அனைத்திற்கும் கருத்தடை செய்யுங்கள்” என பீட்டா வலைதளம் தெரிவிக்கிறது. ஏனென்றால், “ கருத்தடை செய்யப்படாத ஒரு பூனையும் அதன் குட்டிகளும் ஏழு வருடங்களிலேயே 420,000 பூனைகளை உருவாக்கிவிடும். கருத்தடை செய்யப்படாத ஒரு ஆண் நாய் எண்ணற்ற குட்டிகள் பிறக்க காரணமாகும்” என பீட்டா தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும்,“அதிக விலங்கு எண்ணிக்கை காரணமாக பூனைகளும் நாய்களும் அனுபவிக்கும் துன்புறுத்தலில் இருந்தும் மரணத்தில் இருந்தும் அவற்றை காக்க ஒரே வழி அவற்றிற்கு கருத்தடை செய்வது மட்டும் தான்” என பீட்டா வாதிடுகிறது. காமப்பட நட்சத்திரங்களையும், பிரபல நபர்களையும் (டைகர் வுட்ஸ், சில்வியோ பெர்லுஸ்கோனி போன்றோர்) வைத்து இந்த கொள்கையை விளம்பரப்படுத்துகிறது பீட்டா.
விலங்குகளுக்கு கருத்தடை செய்ய வேண்டுமென்றே அல்லது வேண்டாமென்றோ எனக்கு எவ்வித நிலைப்பாடும் கிடையாது. இவர்களின் பாரபட்ச போக்கை சுட்டிக்காட்டுவதே ஏன் நோக்கம். வன்முறையின் மூலங்கள் மனித வாழ்வோடும், நாகாரீகத்தோடும் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கும் போது எவையெல்லாம் விலங்குகளுக்கு கொடுமை என்பதை எப்படி கண்டடைய முடியும்?
மனித இன விருத்தியின் அரசியல் குறித்து மிக கவனமாகவே இருக்கிறது பீட்டா. மனிதர் அல்லாத இனத்தின் துயரை போக்க தன்னை அர்ப்பணித்து கொள்ளும் பீட்டா, தன் ஆதரவாளர்களை விரோதிக்காத வகையில், கருக்கலைப்பு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த அமைப்புக்கு கருக்கலைப்பு குறித்து எந்த நிலைப்பாடும் இல்லை என தெளிவுபடுத்துகிறது. “ விலங்கு உரிமை இயக்கத்தில் கருக்கலைப்பு பிரச்சினை குறித்து இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. விலங்கு உரிமைகள் குறித்து கருக்கலைப்பிற்கு எதிரான இயக்கத்திற்கு எந்த அதிகாரப்பூர்வமான நிலைப்பாடும் இல்லாதது போல , கருக்கலைப்பு குறித்து விலங்கு உரிமை இயக்கத்திற்கு எந்த அதிகாரப்பூர்வமான நிலைப்பாடும் இல்லை” என்பது கருக்கலைப்பு குறித்த பீட்டாவின் அறிக்கை.
ப்ரூனோ லடூர் சுருக்கமாக சொல்வது போல, அறிவு சார் இடைவெளிகளால் நாம் நம் கடந்த காலத்தில் இருந்து பிரிக்கப்படவில்லை. ஆனால், (அன்று போல) இன்று, முற்றிலும் இயற்கையாகவோ, முற்றிலும் சமூகமாகவோ இல்லாத கூட்டாக தான் நாம் வாழ்கிறோம். நவீன உலகில் இராணுவ நடவடிக்கைகள் அல்லது இன அழிப்பு ஆகியவற்றின் பெயரில், மனிதர் அல்லது விலங்கு பலிகளை, கடந்த காலத்தின் அவமானங்கள் என நாம் ஒதுக்கிவிட முடியாது. அதனையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.
தேசிய அரசுகளால் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக இந்த சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வாய் திறக்க மாட்டார்கள். ஏனெனில், தேசிய அரசுகளையோ, நிதிய முதலாளித்துவத்தையோ விரோதிக்காமல், குறிப்பிட்ட புதிய தாராளவாத ஆணையினால் நன்மை அடையும் வரை தான், பெரும்பாலான மேற்கத்திய தொண்டு நிறுவனங்கள் நிலைத்திருக்கும்.
பீட்டாவின் பிரச்சாரங்களும் திட்டங்களும் நட்சத்திரங்களின் சந்தை மதிப்பை சார்ந்தே இருக்கிறது.மற்ற பல சர்வதேச தொண்டு நிறுவனங்களைப் போலவே, இவர்களுடைய உத்திகள், தாராளவாத ஒழுங்கின் சந்தையும், நுகர்வும் இருக்கும் வரையில் தான் நிலைத்திருக்கும். உலகமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் காடுகள் உட்பட அத்தனை வகையான வளங்கள் அழிக்கப்படவும்,பூமியை வெப்பமாக்கவும், பெருமளவில் வன்முறையை தூண்டவும்- சந்தை, நுகர்வு ஆகிய இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளே காரணம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஜல்லிக்கட்டின் இன்றைய வடிவில் அதை ஆதரிக்க வேண்டும் என இக்குறிப்பு எழுதப்படவில்லை. தமிழர்களின் அத்தனை மரபுகளும் அவர்களுக்கு பெருமை சேர்ப்பதில்லை. முதலாவதாக தலித்துக்களை அவமதிக்கும் சமத்துவமற்ற இடமாக அது இருப்பது தொடர்கிறது. அனைவருக்கும் பொதுவான, தலித்- அல்லாதோருக்கும் மட்டும் பெருமையான ஒரு மரபில் தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமானால் இது மாற வேண்டும். ஜல்லிக்கட்டு குறித்து இணையதளத்தில் பதிந்திருக்கும் வீடியோக்களில், காளைகள் வதை செய்யப்படுவதை மிகத் தெளிவாக பார்க்க முடிகிறது. பெரும்பாலும் தலித் – அல்லோதாராக இருக்கும் , ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள், காளை வதைக்கப்படாத ஒரு ஜல்லிக்கட்டை நிகழ்த்த முழு ஈடுபாட்டுடன் முயல வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[முரளி சண்முகவேலன் முழுமையான கட்டுரைக்கு]
https://minnambalam.com/political-news/special-column-murali-shanmugavelan/
https://minnambalam.com/political-news/covid19-attack-also-world-democracy/
https://minnambalam.com/political-news/special-article-country-chicken-murali-shanmugavelan/