பொங்கல் தினமான ஜனவரி 15 அன்று நடைபெற உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளார்க் பணிக்கான முதன்மைத் தேர்வு தேதியை மாற்ற முடியாது என்று மத்திய நிதி அமைச்சகம் இன்று (ஜனவரி 14) அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 5,486 கிளார்க் பணிக்கான முதல்நிலைத் தேர்வு 2022-ல் நடத்தப்பட்டது. இதையடுத்து, அடுத்தகட்ட முதன்மைத் தேர்வு ஜன. 15-ம் தேதி நடைபெறும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்வு நாளை மாற்றக் கோரி வங்கி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினர். ஆனாலும் தேர்வு நாள் மாற்றப்படவில்லை.
இதனையடுத்து எஸ்பிஐ முதன்மைத் தேர்வை, வேறு தேதிக்கு மாற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வட்டார அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தேர்வு தேதியை மாற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
அதன்பின்னர், வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ராதாகிருஷ்ணாவுடன் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய முடிவு எடுப்பதாக ராதா கிருஷ்ணன் கூறினார்.
எனினும், உடனடியாக பதில் தெரிவிக்க வலியுறுத்தி, அவரது அறையில் சு.வெங்கடேசன் அமர்ந்து, உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்.
அவரது 12 மணி நேர காத்திருப்பு போராட்டத்திற்கு எம்.பி.க்கள் திருமாவளவன், செல்லக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாளை காலை பதில் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
தேர்வு நிச்சயம் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தேர்வு தேதியை மாற்ற முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட முடியாத சூழ்நிலைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.100 கோடி கேட்டு மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்!
டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் மீண்டும் சோதனை : மறுக்கும் சிபிஐ