பாஜக 400 இடங்களைக் கைப்பற்ற முடியுமா? வாக்கு சதவீதங்கள் என்ன சொல்கின்றன?

Published On:

| By vivekanandhan

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்று நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் இது சாத்தியமா? அந்த அளவிற்கான செல்வாக்கு பாஜகவிற்கு இருக்கிறதா என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் தகவல்களை வைத்துப் பார்ப்போம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பாஜகவிற்கு வழங்கியதுடன், நாட்டில் பாஜகவை எதிர்க்கும் அளவிற்கு வலிமை கொண்ட எதிர்கட்சிகளே இல்லை என்ற ரீதியில் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்யவும் வழிவகுத்தது.

குறைவான வாக்கு வித்தியாசங்களில் வென்ற தொகுதிகள்

பாஜக வெற்றி பெற்ற 303 தொகுதிகளில் 77 தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவரங்களை தி வயர் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதில் குறிப்பாக 10 தொகுதிகளில் 10,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும் குறிப்பாக 40 தொகுதிகளில் 50,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளது. இந்த வித்தியாசம் எப்படி வேண்டுமானாலும் மாறக் கூடிய ஒன்றே. இந்த 40 தொகுதிகளில் எதிர்கட்சிகள் வேலை செய்து வெற்றியை மாற்றினால் கூட பாஜகவின் தொகுதிக் கணக்கு 263 ஆகக் குறையும்.

இந்த 40 தொகுதிகளில் 11 தொகுதிகள் காங்கிரசுக்கு எதிராகவும், 6 தொகுதிகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராகவும், 4 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், மீதமுள்ள மற்ற தொகுதிகள் பிற கட்சிகளுக்கு எதிராகவும் வெற்றி பெற்றதாகும்.

இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வதற்கு குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்திய அளவில் இந்த சிறிய மாற்றம் நடந்தாலே பாஜகவால் தனியாக ஆட்சி அமைய முடியாத சூழல் உருவாகும் என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

இரண்டு கூட்டணிகளின் வாக்கு சதவீதங்கள்

இந்தியாவின் பிரதான இரண்டு கூட்டணிகளான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் 2019 இல் தனித்தனியாக பெற்ற வாக்கு சதவீதங்களைக் கூட்டிப் பார்த்தால் இரண்டு கூட்டணிகளின் பலம் என்ன என்பது தெரிய வரும்.

ஒவ்வொரு கட்சியும் அவர்களின் சின்னத்தில் மொத்தமாக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையானது, இந்தியாவில் மொத்தமாக பதிவான வாக்குகளில் எத்தனை சதவீதம் என்பதன் அடிப்படையில் இந்த வாக்கு சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதங்களைப் பார்க்கலாம்.

  • பாஜக 37.3% வாக்குகளைப் பெற்றது.
  • சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 2.04% வாக்குகளைப் பெற்றது.
  • நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 1.45% வாக்குகளைப் பெற்றது.
  • குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 0.56% வாக்குகளைப் பெற்றது.
  • ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி 0.52% வாக்குகளைப் பெற்றது.
  • மருத்துவர் ராமதாசின் பாமக 0.37% வாக்குகளைப் பெற்றது.
  • பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 0.31% வாக்குகளைப் பெற்றது.
  • அசாம் கன பரிஷத் கட்சி 0.24% வாக்குகளைப் பெற்றது.
  • ராஷ்டிரிய லோக் தள் கட்சி 0.24% வாக்குகளைப் பெற்றது.
  • தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீதமுள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து அதிகபட்சமாக 1% வாக்குகளைப் பெற்றுள்ளன.

இவை எல்லாவற்றையும் சேர்க்கும்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 44% வாக்குகளைப் பெற்றுள்ளது.

இவை தவிர்த்து மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியின் ஒரு பிரிவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன. இந்த கட்சிகள் வாங்கிய வாக்குகளில் பாதி வாக்குகள் பாஜகவிற்கு செல்வதாக எடுத்துக் கொள்வோம். சிவசேனா 2.09% வாக்குகளையும், தேசியவாத காங்கிரஸ் 1.38% வாக்குகளையும் பெற்றது. இதில் சிவசேனாவின் 1.04% சதவீதமும், தேசியவாத காங்கிரசின் 0.69% சதவீதமும் தேசிய கூட்டணியில் சேர்ந்தால் மொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு வங்கி என்பது 45.7% சதவீதம் ஆகும்.

இந்தியா கூட்டணி

இப்போது இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தைப் பார்க்கலாம்.

  • காங்கிரஸ் கட்சி 19.46% வாக்குகளைப் பெற்றது.
  • மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4.06% வாக்குகளைப் பெற்றது.
  • அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 2.55% வாக்குகளைப் பெற்றது.
  • மு.க.ஸ்டாலினின் திமுக 2.34% வாக்குகளைப் பெற்றது.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1.75% வாக்குகளைப் பெற்றது.
  • தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 1.08% வாக்குகளைப் பெற்றது.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.58% வாக்குகளைப் பெற்றது.
  • அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 0.48% வாக்குகளைப் பெற்றது.
  • ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 0.31% வாக்குகளைப் பெற்றது.
  • கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 0.26% வாக்குகளைப் பெற்றது.
  • இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.26% வாக்குகளைப் பெற்றது.
  • சிபிஐ (எம்.எல்) கட்சி 0.12% வாக்குகளைப் பெற்றது.

மீதமுள்ள மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து அதிகபட்சமாக 1% வாக்குகளைப் பெறுகின்றன. இந்த கட்சிகள் மொத்தமாக 34.25% வாக்குகளைப் பெற்றுள்ளன.

சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவும், தேசிவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவும் இந்தியா கூட்டணியில் இருக்கின்றன. அவர்கள் பெற்ற வாக்குகளில் பாதி வாக்குகள், இந்தியா கூட்டணிக்கு செல்வதாக எடுத்துக் கொள்வோம். இதனால் மொத்தமாக இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கி என்பது 36% சதவீதமாக இருக்கிறது.

போட்டி எப்படி இருக்கும்?

கடந்த தேர்தல் வாக்கு சதவீதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியே வாக்கு வங்கியில் செல்வாக்கு செலுத்துகிறது. பாஜக 10 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால், அது மக்களிடையே எந்த அளவுக்கு அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த வாக்கு சதவீதங்கள் மாறும்.

கடந்த தேர்தலில் பாஜக தனியாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்ற போது பெற்ற வாக்கு சதவீதம் என்பது 37.3% சதவீதமே. ஏறக்குறைய இதற்கு இணையான வாக்கு வங்கியை இந்தியா கூட்டணியின் கட்சிகள் வைத்திருக்கின்றன. மேலும் பெரும்பாலான எதிர்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதால் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகமாகப் பிரியாமல் இந்தியா கூட்டணிக்கே செல்லும். எனவே போட்டி என்பது Neck to Neck ஆக இருக்கும் என்பதை கவனிக்க முடிகிறது.

5 ஆண்டுகளில் வாக்கு சதவீதங்களில் நிகழ்ந்த மாற்றங்கள்

மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்த 5 ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்த பல மாநிலங்களில் பாஜகவின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது. பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் 2019க்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் வாக்கு வங்கி சரிவை சந்தித்திருப்பதை கவனிக்க முடிகிறது.

ஏன் பாஜக அசைக்க முடியாத பலத்துடன் இருப்பதாகப் பார்க்கப்படுகின்ற உத்திரப் பிரதேசத்தில் கூட நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றதைவிட சட்டமன்றத் தேர்தலில் 9% குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. அதேபோல் குஜராத்திலும் 10% பாஜகவின் வாக்கு வங்கி குறைந்திருக்கிறது.

மேலும் தமிழ்நாட்டில் அதிமுகவும், மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி இருப்பதும் இம்மாநிலங்களில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை குறைக்கும்.

இதுபோன்ற பல காரணிகள் பாஜகவின் கனவிற்கு எதிராக இருக்கின்றன. பாஜக நிர்ணயித்திருக்கிற 400+ என்கிற இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பதையும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்பதையுமே கடந்த 5 ஆண்டுகளில் வாக்கு சதவீதங்களில் நிகழ்ந்த மாற்றங்கள் காட்டுகின்றன.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜக கூட்டணி மற்ற மாநிலங்களில் எப்படி இருக்கிறது?

25 ஆண்டுகள் முதலமைச்சர்…அஸ்திவாரத்தை அசைக்கும் பாஜக…ஒடிசாவைக் கைப்பற்றப்போவது யார்?

முதல்வருக்கு கிடைத்த தருமபுரி ரிப்போர்ட்…மாவட்டச் செயலாளர்களை வெளுத்துக் கட்டிய அமைச்சர்!

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகல துவக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share