வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாவில் இடைத்தேர்தல் களக் காட்சிகள் வந்து விழுந்தன. ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பல்வேறு கட்சிகளும் நடத்தும் கூட்டங்கள் பற்றிய போட்டோக்களைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அதிமுகவின் இரு அணிகளாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் ஜனவரி 21 ஆம் தேதி தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு சென்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்திருக்கிறார்கள்.
வர இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார். இதை தமாகா தலைவர் ஜி.கே. வாசன் மூலமாகவே அவர் அறிவிக்க வைத்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், தனது அணியும் அதிமுக சார்பில் வேட்பாளரை களமிறக்கும் என்று அறிவித்தார். மேலும் அவர் 21 ஆம் தேதி மாலை கமலாலயம் சென்று அண்ணாமலையை சந்திக்க இருந்த நிலையில், அவரை முந்திக் கொண்டு எடப்பாடி தரப்பில் கே.பி. முனுசாமி, செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கமலாலயம் சென்றனர்.
அவர்களைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் தானே தன் ஆதரவாளர்களோடு கமலாலயம் சென்று அண்ணாமலையை சந்தித்தார்.
எடப்பாடி, பன்னீர் இரு தரப்பினரும் வந்து சென்ற பிறகு அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகளுடன் சில நிமிடங்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
ஏற்கனவே கடலூரில் ஜனவரி 20 ஆம் தேதி காலை மாநில செயற்குழுவுக்கு முன் நடந்த உயர் மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 90% நிர்வாகிகள் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.
ஆனால் அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட சிலர்தான் தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
‘இவ்வளவு நாள் பாஜகதான் பிரதான எதிர்க்கட்சி என்று பேசிவிட்டு தேர்தல் என்று வந்தால் பின் வாங்குவது அண்ணாமலையின் இமேஜுக்கும், பாஜகவின் இமேஜுக்கும் சறுக்கலாக இருக்கும்’ என்று அண்ணாமலையிடம் தனிப்பட்ட முறையிலும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் கடந்த கால புள்ளிவிவரங்கள் கேட்டுப் பெற்றிருக்கிறார் அண்ணாமலை.
ஈரோடு கிழக்கு தொகுதி என்பது ஈரோடு தாலுகா உள்ளிட்ட நகர பகுதிகளைக் கொண்டது. 2008 ஆம் ஆண்டில்தான் புதிதாக உருவாக்கப்பட்டது. 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களையே இதுவரை சந்தித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் சார்பாக ராஜேஷ்குமார் போட்டியிட்டு 3,244 ஓட்டுக்களே வாங்கினார். இது பதிவான மொத்த ஓட்டுகளில் 2.38% தான்.
அடுத்து 2016 சட்டமன்றத் தேர்தலிலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதே ராஜேஷ்குமார் போட்டியிட்டு முந்தைய தேர்தலை விட 3 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று 5,549 வாக்குகளைப் பெற்றார். இந்த முறை பாஜக 3.75% வாக்குகள் பெற்றது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடவில்லை.
இந்த விவரங்களை பார்த்த அண்ணாமலையிடம், “ஈரோடு கிழக்கு தொகுதி நகரப் பகுதிகள் நிறைந்தது என்பதும், எதிர் தரப்பு காங்கிரஸ் வேட்பாளர் பெரியார் குடும்பத்தின் நேரடி வாரிசு என்பதையும் முக்கியமான கணக்கில் கொள்ள வேண்டும்” என்றும் ஈரோடு மாவட்ட பாஜக நிர்வாகிகளே சொல்லியிருக்கிறார்கள்.
இவ்வாறு பல நிர்வாகிகள் பாஜக இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று சொன்னாலும் அண்ணாமலைக்கு மனசு ஆறவில்லை.
உடனடியாக ஜனவரி 21 ஆம் தேதி காலை 15 பேர் கொண்ட ஒரு சர்வே டீமை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அந்தத் தொகுதியில் திருமகன் ஈவெராவுக்கு எந்த அளவுக்கு அனுதாபம் இருக்கிறது, அவர் மேற்கொண்ட பணிகள் மக்களுக்கு திருப்தி அளிக்கிறதா, அதிமுக அணியின் குழப்பங்கள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்,
பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாமா வேண்டாமா போன்ற கேள்விகளையும் கொடுத்து 2500 பேரிடம் சாம்பிள் சர்வே எடுத்து திங்கள் கிழமை தனக்கு முடிவு வந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் அண்ணாமலை.
அண்ணாமலை அனுப்பிய சர்வே டீமினர் இரு நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டிருக்கிறார்கள். பாஜக என்ற கலர் இல்லாமல் இந்த சர்வே ஒரு தனியார் நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலைக்கு திங்கள் காலையோ அல்லது பகலோ ஈரோடு கிழக்கில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் அளிக்கப்படும்.
பாஜக அந்தத் தொகுதியில் போட்டியிடலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு இந்த சர்வே முடிவுகளையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
லாக் டவுன்: வாட்டிய வறுமை – வியாபாரி தற்கொலை!
ஈரோடு கிழக்கு: காங்கிரசை எதிர்த்துக் களம் காணுவாரா கமல்?