பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று ( நவம்பர் 3 ) ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக பஞ்சாப் மாகாணத்தின் வஜிராபாத்தில் பேரணி நடத்தினார்.
அப்போது திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயம் ஏற்பட்டதை அடுத்து இம்ரான் கான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவை பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹமீத் மிர் வெளியிட்டுள்ளார்.
அதில் தாக்குதல் நடத்திய வாலிபர், ”யாரும் தன்னை தூண்டிவிடவில்லை. இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பினேன், இதில் வேறு யாருக்கும் சம்மந்தம் இல்லை. லாகூரில் இருந்து புறப்படும் போதே நான் அவரை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.
இது போன்ற ஒரு பேரணியில்தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவும் 2007 ஆம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”ரஞ்சிதமே கொஞ்சணுமே” வெளியான விஜய் பட முதல் பாடல் புரோமோ!
பாகிஸ்தானா, துப்பாக்கிஸ்தானா? இம்ரான் கான் மீது தாக்குதல்!